கடந்த வாரம் கன்னடர்களுக்கு 100 சதவீத இடஒதுக்கீடு என்ற சட்ட மசோதாவை கொண்டுவந்த கர்நாடக அரசு கடும் எதிர்ப்பைச் சந்தித்தது. இந்நிலையில், தினமும் 14 மணி நேர வேலை என்ற புதிய மசோதாவைக் கொண்டு சர்ச்சையில் சிக்கியுள்ளது.
ஊழியர்களின் வேலை நேரத்தை 14 மணி நேரம் வரை நீட்டிக்க வழி வகை செய்யும் ,‘கர்நாடகா கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டத் திருத்த மசோதாவை கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு கொண்டு வந்துள்ளது.
இதற்கான, முன்மொழிவு தொழில்துறை சார்ந்த உயர் அதிகாரிகளுடன் கர்நாடக அரசின் தொழிலாளர் துறையால் நடத்தப்பட்ட கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.
அதன் படி, ஐ டி துறையில் ஒரு ஊழியரின் பணி நேரம்,ஒரு நாளைக்கு 12 மணி நேரத்தில் இருந்து 14 மணி நேரம் வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. மேலும் தொடர்ச்சியாக மூன்று மாதங்களில் 125 மணி நேரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதில் தற்போது , தொழிலாளர் சட்டங்கள் 10 மணி நேரமும் கூடுதலாக 2 மணி நேர ஓவர் டைம் என்ற அடிப்படையில் வேலை நேரத்தை அனுமதிக்கின்றன .
இந்நிலையில், வேலை நேரத்தை ஒரு நாளைக்கு 14 மணிநேரமாக உயர்த்தும் கர்நாடக மாநில அரசின் திட்டத்தை கர்நாடகாவில் உள்ள ஐடி துறை தொழிற்சங்கங்கள் மிக கடுமையாக எதிர்த்துள்ளன.
கர்நாடக மாநில ஐடி ஊழியர் சங்கமான KITU இந்த சட்டத் திருத்தம், தற்போது 3 ஷிப்ட் என்ற நடைமுறையை இரண்டு ஷிப்ட் டாக மாற்றும் என்றும், அதன் காரணமாக பலருக்கு வேலை இழப்பு ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளது.
ஊழியர்களின் வேலை நேரத்தை அதிகரித்தால் 35 சதவீத ஊழியர்களுக்கு பக்கவாத நோயால் ஆபத்து உண்டாகும் என்றும், 17 சதவீத ஊழியர்கள் இதய நோயால் இறக்கும் அபாயமும் உள்ளது என்றும் உலக சுகாதார அமைப்பின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
இதை சுட்டிக் காட்டியுள்ள கர்நாடக மாநில ஐடி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சுஹாஸ் அடிகா, அரசின் சட்டத் திருத்தத்தால் , மாநிலத்தில் உள்ள 20 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்படைவார்கள் என்று கூறியிருக்கிறார்.
மேலும் இது கர்நாடக அரசின் மனிதாபிமானமற்ற செயல் என்று தெரிவித்துள்ள ஐடி நிறுவன ஊழியர்கள், ஊழியர்களை மனிதர்களாக பார்க்கவில்லை என்று குற்றம் சாட்டிருக்கிறார்கள்.
ஏற்கெனவே, ஐ டி துறையில் 45 சதவீத ஊழியர்கள் மனச் சோர்வினாலும், 55 சதவீத ஊழியர்கள் உடல்நலப் பிரச்சனையினாலும் பாதிப்படைந்துள்ளனர். இதில் மேலும் வேலை நேரத்தை அதிகரித்தால் நிலைமை மேலும் மோசமாகும் என்று கூறப்படுகிறது.
கர்நாடக அரசின், முன்மொழிவை தாங்கள் கொடுக்கவில்லை என்று மறுத்துள்ள நாஸ்காம் NASSCOM என்ற மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் தேசிய சங்கம், கர்நாடக அரசின் இந்த சட்ட திருத்த மசோதாவை முற்றிலுமாக நிராகரித்துள்ளது.
சிறந்த முறையில் வேலைநேரம் வாரத்துக்கு 36 முதல் 48 மணிநேரமாக இருக்க வேண்டும் என்றும், அப்படி இல்லை என்றால் ஊழியர்களின் உடல் மற்றும் மனநலத்துக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று இந்திய மருத்துவ மாணவர்களின் சர்வதேசசங்கத்தின் தலைவர் டாக்டர் ஷுபம் ஆனந்த் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
எனவே இந்த சட்ட திருத்தத்தை கர்நாடக அரசு உடனே திரும்ப பெறவேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகிறது.
கடந்த ஆண்டு, இந்தியாவின் வளர்ச்சிக்காக வாரத்தில் 70 மணிநேரம் உழைக்க நாட்டின் இளைஞர்கள் முன்வர வேண்டும் என்ற இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி தெரிவித்த கருத்து பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத் தக்கது.