ஆடிமாத அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலைக்கோவிலுக்கு செல்ல 5 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது.
விசேஷ தினங்களில் மட்டுமே இந்த கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. மேலும், சதுரகிரி கோயிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாச திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆடி அமாவாசை விழா வரும் ஆகஸ்ட் 4ம் தேதி நடைபெறவுள்ளதால், ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு அத்தியாவசிய ஏற்பாடுகளை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மேலும், மலைஏறும் பக்தர்கள் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை எடுத்து செல்ல கூடாது, என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகளை வனத்துறை விதித்துள்ளது.