தமிழகத்தில் மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் போக்கினை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
கடந்த 2018 – 2022 வரையிலான ஐந்து ஆண்டுகளில், நாட்டிலேயே அதிகமாக, 52 கழிவு நீர் அகற்றும் தொழிலாளர்கள் பலியான அவலம் தமிழகத்தில்தான் ஏற்பட்டது.
ஆனால், அதன் பின்னரும், தமிழகத்தில், மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் தீராத அவலம் தொடர்வது வேதனைக்குரியது.
இன்றைய தினம், கடலூரில் பல்வேறு இடங்களில் பாதாளச் சாக்கடை அடைப்பு காரணமாக, கழிவு நீரை அகற்ற, தொழிலாளர்கள், பாதாளச் சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்யும் காணொளிகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று, கடந்த ஆண்டு மாண்புமிகு உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது. மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசும், கையால் துப்புரவு செய்பவர்களின் மறுவாழ்வுக்கான சுயவேலைவாய்ப்புத் திட்டங்கள், மாற்று சுயதொழில் திட்டங்கள், இயந்திரமயமாகச் சுத்தம் செய்வதற்கான கருவிகள், வாகனங்கள் வாங்க மூலதன மானியம் ரூ.5,00,000 உதவித்தொகையுடன் கூடிய திறன் மேம்பாட்டுப் பயிற்சி உட்பட, பல்வேறு திட்டங்களையும், நிதி உதவிகளையும் அளித்து வருகிறது.
இவை தவிர, இயந்திரமயமாக்கப்பட்ட துப்புரவு சுற்றுச்சூழல் அமைப்புக்கான தேசிய நடவடிக்கை (NAMASTE) திட்டத்திற்கு, வரும் 2025-2026 ஆண்டுவரை ரூ. 349.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கையால் துப்புரவு செய்பவர்கள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளைப் பாதுகாப்பின்றி சுத்தம் செய்வதில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் மறுவாழ்வு மற்றும், பாதுகாப்பான, இயந்திரங்களைப் பயன்படுத்தி சுத்தம் செய்வதை ஊக்குவித்தல் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
ஆனால், திமுக அரசு ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளைக் கடந்தும், துப்புரவுத் தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் திட்டங்கள் எதையும் செயல்படுத்தாமல் புறக்கணித்திருப்பதோடு, மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையையே தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
தொழிலாளர்களுக்கு அடிப்படை பாதுகாப்பு உபகரணங்கள் கூட வழங்கப்படாமல், பாதாளச் சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்ய வைத்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. மனித உரிமைகளுக்கே எதிரான திமுக அரசின் இந்த செயல்பாடு, உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கும் விரோதமானது.
தமிழகத்தில் மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் போக்கினை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என்றும், இந்த நிகழ்வுக்குக் காரணமான அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், துப்புரவுத் தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் அனைத்துத் திட்டங்களும், அவர்களுக்கு முழுமையாகச் சென்றடையும்படி, திமுக அரசு செயல்பட வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.