கன்வர் யாத்திரை செல்லும் பாதைகளில் இருக்கும் உணவகங்களில் உரிமையாளர் பெயர்கள் எழுதி வைக்க வேண்டும் என்று உத்தர பிரதேச அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இந்நிலையில், இந்த யாத்திரைக்கான காவடிகளைத் தயாரிக்கும் தொழிலில் 80 சதவீதம் இஸ்லாமியர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.அது பற்றி ஒரு செய்தி தொகுப்பு.
கன்வர் என்றால் காவடி. கன்வர் யாத்திரை என்பது காவடி யாத்திரை எனப்படும். மூங்கிலால் ஆன இந்த காவடியில் எதிர் எதிர் முனையில் இரண்டு மண் பானைகள் இணைக்கப்பட்டிருக்கும். அழகிய வண்ணங்களுடன் வடிவமைக்கப் பட்டிருக்கும் இந்த மண் பானையில் தான், யாத்திரையின் போது கங்கை நீரை சிவ பக்தர்கள் சேகரித்து வருவார்கள்.
இதற்காகவே, தெற்கு கோவாவில் இருக்கும் பேட் தீவு மற்றும் ஹரித்வாரில் உள்ள பந்ததீப் பார்க்கிங்கில் காவடி கண்காட்சி ஆண்டுதோறும் நடைபெறுவதுண்டு. மீரட், சஹாரன்பூர், முசாபர்நகர், டெல்லி மற்றும் பிற பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் காவடி கண்காட்சியில் கலந்து கொள்வார்கள்.
ஹரித்வாரில் பெரும்பாலான காவடிகள் ஜ்வாலாபூரில் உள்ள இந்திர பஸ்தியில் உள்ள இஸ்லாமிய கை வினைஞர்களால் தயாரிக்கப்படுகின்றன.
காவடியின் அளவு மற்றும் துணியில் உள்ள நுணுக்கமான அலங்காரக் கலைத்திறன் அளவைப் பொறுத்து, ஒரு காவடியின் விலை 500 ரூபாயிலிருந்து 30000 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
பல இஸ்லாமிய குடும்பங்கள், தங்கள் குலத்தொழிலாகவே இந்த காவடிகளைத் தயாரித்து வருகிறார்கள்.
ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் உள்ள ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். மூங்கில் குச்சிகளை ஒன்றாகக் கட்டி, அதை இந்து தெய்வ உருவம் அச்சிடப்பட்ட துணியால் அலங்கரித்து, துணியில் ஜிகினா போன்ற பிற அலங்காரங்களை ஒட்டி காவடியை அழகாக தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள்.
தமது தாத்தா காலத்திலிருந்தே காவடிகளைத் தயாரித்து வருவதாக கூறும் 16 வயதான ஷாகிப் ஸ்க்ரோல், இந்து, இஸ்லாமியர் இடையே சகோதரத்துவத்தை வளர்க்கும் என்பதால் இதைத் தொடர்ந்து செய்து வருவதாக தெரிவித்திருக்கிறார்.
இரவு பகலாக வேலை செய்து, கன்வர் யாத்திரை காலங்களில் , ஒரு இஸ்லாமிய குடும்பம் சராசரியாக 1000 காவடிகளைத் தயாரிக்கிறது என்று காவடி செய்யும் கைவினைக் கலைஞரான நதீம் அகமது தெரிவிக்கிறார்.
15 ஆண்டுகளாக காவடிகளைத் தயாரிக்கும் இன்னொரு கைவினைக் கலைஞர் அப்ரார், எல்லா இந்துகளும், இஸ்லாமியருக்கு சகோதரர்களே என்று கூறியிருக்கிறார்.
சிவ பக்தர்களும் தங்கள் கைவினைக் கலைநயத்தைப் பாராட்டுகிறார்கள் என்று கூறும் இஸ்லாமியரான மணீஷ் சௌத்ரி, சகோதரத்துவத்தின் அடையாளமாக, இஸ்லாமியர் உருவாக்கிய காவடியை இந்துக்கள் வாங்கிச் செல்கின்றனர் என்று கூறியிருக்கிறார்.
காவடி தயாரிப்பதை தங்கள் குடும்பத் தொழிலாக செய்து வரும் ரெஹான், சிவ பக்தர்களுக்கு காவடி செய்து தரும் சின்ன உதவியை செய்வது அதிர்ஷ்டம் என்று பெருமிதத்துடன் கூறியிருக்கிறார்.
கன்வர் யாத்திரையின் போது மத எல்லைகளைத் தாண்டிய ஒற்றுமை மற்றும் பரஸ்பர மரியாதையை இது காட்டுகிறது.