33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது.
சர்வதேச அளவில் நடைபெறும் முக்கிய விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. இந்நிலையில், பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இன்று ஒலிம்பிக் போட்டி தொடங்குகிறது.
ஆகஸ்ட் 11ம் தேதி வரை 17 நாட்கள் நடைபெறும் போட்டியில், 206 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்து 741 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
42 வகையான விளையாட்டுகளில், 329 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. ஸ்கேட் போர்டிங், பிரேக்கிங் உள்ளிட்ட 4 விளையாட்டுகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. இந்தியாவை பொருத்தவரை 16 வகையான விளையாட்டுகளில் 112 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
கண்கவர் கலைநிகழ்ச்சிகள், வாணவேடிக்கையுடன் நடைபெறும் தொடக்க விழாவில் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் உள்ளிட்ட உலக தலைவர்கள் பங்கேற்கின்றனர். தொடக்க விழாவை மைதானத்தில் இல்லாமல், பாரீசின் புகழ்பெற்ற சென் நதி கரையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் வரலாற்றில் தொடக்க விழா ஸ்டேடியத்திற்கு வெளியே நடத்தப்படுவது இதுவே முதல்முறையாகும். ஒலிம்பிக் தொடக்க விழா இந்திய நேரப்படி இன்று இரவு 11 மணிக்கு தொடங்குகிறது.