பிரதமர் மோடியின் ரஷ்ய பயணத்தின் பலனாக எஸ்-400 ஏவுகணையுடன், அதனை செலுத்துவதற்கு தேவையான வாகனம், ஏவு கருவிகளும் அடங்கிய 120 அதிநவீன ஏவுகணைகளை இந்தியா வாங்கியுள்ளது. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பு.
புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், 2019ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி இந்திய விமானப்படை நடத்திய பாலகோட் வான்வழித் தாக்குதல் இந்திய வரலாற்றில் சிறப்புமிக்க ராணுவ நடவடிக்கையாகும்.
பாலகோட் வான்வழித் தாக்குதலுக்குப் பிறகு நீண்ட தூர ஏவுகணைகளை ரஷ்யாவிடமிருந்து வாங்குவதற்கான முடிவை பிரதமர் மோடி தலைமையிலான அரசு எடுத்தது.
2019ம் ஆண்டில், ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணையுடன், அதனை செலுத்துவதற்கு தேவையான வாகனம், ஏவு கருவிகளும் அடங்கிய 5 தொகுதிகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியாவும் ரஷ்யாவும் கையெழுத்திட்டன.
கொரொனா தொற்றுநோய் பரவல் மற்றும் ரஷ்யா- உக்ரைன் போர் ஆகிய காரணங்களால் இந்த எஸ்-400 ஏவுகணைகளை வாங்குவது தாமதமாகி வந்தது.
இந்நிலையில்,பிரதமர் மோடியின் ரஷ்ய பயணம், மீதமுள்ள இரண்டு S-400 ஏவுகணைகளையும் அவை தொடர்பான இராணுவ பாதுகாப்பு தளவாடங்களையும் விரைவாக வழங்குவதற்கு தேவையான அழுத்தத்தை ரஷ்யாவுக்கு ஏற்படுத்தியது.
அதன் பலனாக, அதிநவீன வான் வழி தாக்குதல் ஏவுகணைகளை இந்தியா வாங்கியுள்ளது. இதுவரை எஸ்-400 ஏவுகணையுடன், அதனை செலுத்துவதற்கு தேவையான வாகனம், ஏவு கருவிகளும் அடங்கிய 3 தொகுதிகளை இந்தியாவுக்கு ரஷ்யா வழங்கியுள்ளது.
மீதமுள்ள இரண்டு தொகுதிகளும் இந்த ஆண்டு டிசம்பருக்குள் ரஷ்யா வழங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
உலகளவில் மிக மிக நவீன ரக ஏவுகணைதான் ரஷ்யாவின் இந்த எஸ்-400 ஏவுகணை. எஸ்-400 ஏவுகணை தரையிலிருந்து வான் இலக்குகளை துல்லியமாக தகர்க்கும் திறன் கொண்டதாகும். 2007ம் ஆண்டிலிருந்து எஸ்-400 ஏவுகணைகளை ரஷ்யா ராணுவத்தில் பயன்படுத்தி வருகிறது.
மேலும், ரஷ்ய ராணுவம் பயன்படுத்தி வந்த எஸ்-300 ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட புதிய ஏவுகணை தான் இந்தியா வாங்கும் எஸ்-400 ஏவுகணை.
எஸ்-400 ஏவுகணைகளுடன், அதற்கு தேவையான 5 ஏவு தள வாகனங்களையும், அதற்கான கருவிகளையும் இந்தியா வாங்குகிறது. இதில், மூன்று ஏவுதள வாகனங்களை பாகிஸ்தான் எல்லை நோக்கியும், இரண்டு ஏவுதள வாகனங்களை சீனா நோக்கியும் நிறுத்தி வைக்க இந்தியா முடிவு செய்திருக்கிறது.
இந்த ஏவுகணையானது, ஒரே நேரத்தில் நூறு இலக்குகளை கூட கண்காணித்து துல்லியமாக தாக்கும் வல்லமை கொண்டதாகும் .
ஏவுகணைகளுடன் அவற்றை செலுத்துவதற்கான தானியங்கி ஏவு தளமாக செயல்படும் வாகனங்களும் அதற்கான நவீன ரேடார்களையும் இந்தியா வாங்குகிறது.
கண்களுக்கு புலப்படாத விசேஷ வடிவமைப்பு கொண்ட விமானங்களை கூட இந்த ரேடார்கள் கண்டறிந்து இடைமறித்து தாக்கும் என்றும், அதனால் வான் வழியாக இந்திய எல்லைக்குள் ஊடுருவும் அதிவேக ஏவுகணைகளை எளிதில் கண்டறிந்து தாக்குவதற்கு இந்த எஸ்-400 பயன்படும் என்றும் கூறப்படுகிறது.
அதாவது, 600 கிமீ சுற்றளவிலும், 100 கிமீ உயரத்தில் எந்த திசையிலிருந்தும் வரும் எதிரிகளின் ஏவுகணைகள், ஆள் இல்லா விமானங்கள் மற்றும் போர் விமானங்களைச் சுக்குநூறாக்கும் வல்லமை கொண்டதாகும் எஸ்-400 ஏவுகணை.
இந்த எஸ்-400 ஏவுகணைகள் , 40,120, 250, மற்றும் 400 கிலோமீட்டர் வேகத்தில் கிளம்பி பாய்ந்து செல்லும் திறன் கொண்டவையாகும்.
அமெரிக்காவின் ஸ்டீல்த் ரக போர் விமானமான எஃப்-15 விமானத்தையே கூட இந்த ஏவுகணை கண்டறிந்து சுட்டு வீழ்த்தும் திறன் கொண்டதாக உள்ளது. அதனால் தான் இந்த ஏவுகணை அமெரிக்காவே அஞ்சும் ஏவுகணை என்று குறிப்பிடுகிறார்கள்.
இந்தியா மொத்தம் 6,000 எஸ்-400 ஏவுகணைகளையும், அதற்கான 5 ஏவு வாகனங்களையும் வாங்குகிறது. ஒரு ஏவு வாகனத்தில் ஏவுகணையை செலுத்துவதற்கான 8 லாஞ்சர்கள், ஒரு நடமாடும் கட்டுப்பாட்டு மையம் மற்றும் 16 ஏவுகணைகளை பொருத்தி வைப்பதற்கான வசதிகள் இருக்கும்.
இந்த எஸ்-400 ஏவுகணை 600 கிலோமீட்டர் சுற்றளவுக்கான இலக்குகளை கண்காணிக்கும் திறன் உடையதாகும்.
குறைந்தது 2 கிலோமீட்டர் முதல் 400 கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ள இலக்குகளைக் கூட துல்லியமாக தாக்கி அழிக்கும் ஆற்றல் கொண்டதாகும். அதாவது, மணிக்கு 17,000 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் வல்லமை கொண்டதாகும்.
40,000 கோடி ரூபாய்க்கு இந்த எஸ்-400 ஏவுகணை தொகுதிகளை இந்தியா வாங்குகிறது. எல்லை தாண்டிய ஆக்கிரப்பில் இறங்கும் சீனா பாகிஸ்தான் ஆகிய நாடுகளை அடக்கி வைப்பதற்கு இது பயன்படும் என்று இராணுவத் துறை வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
ஏற்கனவே, தைவான் நாட்டை மிரட்டுவதற்காக 6 எஸ்-400 ஏவுகணை மற்றும் அதற்கான உபகரணங்களை ரஷ்யாவிடமிருந்து வாங்குவதற்கு சீனா ஒப்பந்தம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.