வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில் மாநிலங்கள் முக்கிய பங்கு வகிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் மாளிகை கலாசார அரங்கில் நிதி ஆயோக்கின் உயரிய அமைப்பான நிர்வாகக் குழுவின் ஒன்பதாவது கூட்டம் நடைபெற்றது. இதற்கு தலைமை வகித்த பிரதமர் மோடி, சுதந்திர தின விழாவின் நூற்றாண்டான 2047-ஆம் ஆண்டில் வளர்ச்சியடைந்த பாரதத்தை காண ஒவ்வொரு இந்தியரும் விரும்புவதாக தெரிவித்தார்.
அந்த வகையில், மக்களுடன் நேரடித் தொடர்பில் இருப்பதால், வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில் மாநில அரசுகள் முக்கிய பங்கு வகிப்பதாக பிரதமர் மோடி மேற்கோள்காட்டினார்.
இந்த பத்தாண்டு மாற்றம், தொழில்நுட்பம் மற்றும் வாய்ப்புக்கானது என்று கூறிய பிரதமர் மோடி, இதைப் பயன்படுத்திக் கொண்டு சர்வதேச முதலீடுகளுக்கு உகந்த கொள்கையை வகுக்க வேண்டும் என மாநில அரசுகளைக் கேட்டுக்கொண்டார்.