நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்வைத்த காரணங்களுக்கு தக்க பதிலடி கொடுத்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதால் டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஏற்கெனவே கடந்த 2022-இல் கருணாநிதியின் நினைவு தினத்தையும், 2023-இல் வெளிநாட்டு சுற்று பயணத்தையும் காரணம் காட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணித்தாக தெரிவித்துள்ளார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தாமதத்துக்கு மாநில அரசு சார்பில் நிலம் கையகப்படுத்தும் பணியில் ஏற்பட்ட தாமதம்தான் காரணம் என்றும், இதை கடந்த ஆண்டு ஆகஸ்டில் நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கியதையும் அண்ணாமலை நினைவுகூர்ந்தார். மேலும், எய்ம்ஸ் மருத்துவமனைக்காக மரங்களை வெட்ட தடையில்லா சான்றிதழ் வழங்கவே மாநில அரசு 6 மாதங்கள் எடுத்துக்கொண்டதாகவும் அண்ணாமலை சுட்டிக்காட்டியுள்ளார்.