பழங்குடியின சமூகங்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு 200 % அதிகரிக்கப்பட்டுள்ளது: மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால்
மேகாலயாவின் ஷில்லாங்கில் வர்த்தக சமூகம், இளைஞர்கள் – பெண்கள் பிரதிநிதிகளுடன் மத்திய பட்ஜெட் – 2024 குறித்த விவாதத்தில் மத்திய துறைமுகங்கள், கப்பல், நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான பாதையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது என்றார். இளைஞர்கள், பெண்கள், பழங்குடியின சமூகங்களை வளர்ச்சி அடையச் செய்வதன் மூலம் வடகிழக்குப் பிராந்தியத்தின் தொழில், வேளாண் துறைகளை மேம்படுத்துவதை இந்த பட்ஜெட் நோக்கமாகக் கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டார். நாட்டின் வடகிழக்குப் பகுதி இந்த பட்ஜெட்டின் மூலம் அதிக பயனடைகிறது என்று சோனோவால் கூறினார்.
பழங்குடி சமூகங்களுக்கு அதிகாரமளித்தல் குறித்த கூட்டத்தில் பேசிய சர்பானந்தா சோனோவால், பழங்குடி சமூகங்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்பான திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக இந்த பட்ஜெட்டில் ரூ.13,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இது 200 % அதிகம் என்றும் கூறினார்.
பழங்குடியின சமூகங்களுக்கு சமூக நீதியை வழங்குவதற்கான மற்றொரு முக்கிய திட்டமான பிரதம மந்திரி ஜன்ஜாதிய உன்னத் கிராம் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார். இது பழங்குடி சமூகங்களின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும், இதன் மூலம் 63,000 கிராமங்களில் உள்ள 5 கோடி பழங்குடியின மக்கள் நேரடியாக பயனடைவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
வடகிழக்குப் பகுதியில் விவசாயத்தை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் காரணமாக இந்தப் பிராந்தியத்தில், விவசாய விளைபொருட்களின் உற்பத்தி வாய்ப்புகள் பெரிதும் மேம்படும் என்று அவர் தெரிவித்தார்.
வடகிழக்குப் பகுதியில் சாலை இணைப்பை மேம்படுத்துவதற்காக 2024 மத்திய பட்ஜெட்டில் ரூ. 19,338 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இது இப்பகுதியில் சுற்றுலா உள்கட்டமைப்பை பெரிதும் மேம்படுத்தும் என்றும் சர்பானந்த சோனோவால் கூறினார்.