தமிழகத்தில் தடுப்பணைகள் அமைத்து தண்ணீரை சேமிக்க தமிழக அரசு சரியான திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென தேமுதிக கழக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாய மக்களுக்காக தண்ணீர் கேட்டபோது கொடுக்காத கர்நாடக அரசு, தாமாக முன்வந்து அணைகளை திறந்துள்ளதாகவும், இயற்கையின் முன் அனைவரும் சமம் என்பதை இந்த நிகழ்வு நிரூபித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு உடன்படாத கர்நாடக அரசு, இயற்கை அன்னையின் முன் மண்டியிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், இன்று தமிழகத்தின் அனைத்து அணைகளும் நிரம்பி வழிவதாகவும் கூறியுள்ளார்.
மேலும், காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியும், பிரதமர் மோடியை நேரடியாக சந்தித்து தீர்மானம் நிறைவேற்றியும், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும் திமுகவால் எதையும் சாதிக்க முடியவில்லை என குற்றம் சாட்டியுள்ள பிரேமலதா விஜயகாந்த்,
இனியாவது உறக்கத்தில் இருந்து விழித்துக் கொண்டு தமிழகத்துக்கு கிடைக்கும் தண்ணீரை தடுப்பணைகள் அமைத்து அரசு பாதுகாக்க வேண்டும் எனவும், டெல்டா பகுதி விவசாயிகளை மட்டுமல்லாமல் தமிழக விவசாயிகளையும் காப்பாற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.