உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில், லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றம் தொடங்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதிவரை நடைபெறுகிறது. நாள்தோறும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் தொடங்கும் அமர்வில் தலா 2 உச்சநீதிமன்ற நீதிபதிகள், 2 வழக்கறிஞர்கள் பங்கேற்று, நிலுவையில் உள்ள வழக்குகளுக்குத் தீர்வு காண்கின்றனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், மக்கள் நீதிமன்றம் இந்த வாரம் 7 நாட்களும் நடைபெறும் என்றும், சிறிய வழக்குகளுக்குத் தீர்வு காணும் வகையில் இதற்கு ஏற்பாடு செய்ததாகவும் தெரிவித்தார்.
சேவைக் குறைபாடு, தொழிலாளர் பிரச்னை, நில மோசடி, மோட்டார் வாகன விபத்து வழக்குகள், காசோலை மோசடி ஆகிய பிரச்னைக்கு மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு காணப்படும் என்றார். வரும்காலத்தில் உச்சநீதிமன்றத்தில் லோக் அதாலத் அமர்வு நிரந்தரமாக்கப்படும் என்றும் டி.ஒய். சந்திரசூட் தெரிவித்தார்.