காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியில் மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு மறுக்கப்பட்டதாகவும், பாஜக ஆட்சியிலேயே இடஒதுக்கீடு வழங்கப்பட்டதாகவும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆதாரத்துடன் விளக்கியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் பதிவில், திமுக மேற்கொண்ட சமரசமற்ற சட்டப் போராட்டத்தால், கடந்த 3 கல்வி ஆண்டுகளில் 15 ஆயிரத்து 66 மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்குக் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மருத்துவ சேர்க்கைக்கான அகில இந்திய ஒதுக்கீடு 1986-ம் ஆண்டே அறிமுகப்படுத்தப்பட்டதாக கூறியுள்ளார்.
2008-09-ம் ஆண்டில், அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, மத்திய கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை அனுமதித்தாலும், மருத்துவ சேர்க்கைக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை மறுத்ததாகவும், அண்ணாமலை கூறியுள்ளார்.
மருத்துவ சேர்க்கைக்கான அகில இந்திய இடஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு கோரி தொடரப்பட்ட வழக்கில், 2015-ம் ஆண்டு பதில் மனு தாக்கல் செய்த மத்திய அரசு, மாநிலங்களுக்கான இடஒதுக்கீட்டை பயன்படுத்த பரிந்துரைத்ததாகவும் அண்ணாமலை கூறியுள்ளார்.
ஓபிசி இடஒதுக்கீட்டில் மத்திய அரசின் நிலைப்பாட்டை இது தெளிவாகக் காட்டுவதாகக் கூறியுள்ள அண்ணாமலை, கடந்த 2021-ம் ஆண்டு, மருத்துவ சேர்க்கைக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் முடிவை பிரதமர் மோடி அறிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பிறரின் உழைப்பிற்கு பெயர் வாங்குவது திமுகவிற்கு ஒன்றும் புதிதல்ல என்று விமர்சித்துள்ள அண்ணமாலை, மருத்துவ சேர்க்கைக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி இடஒதுக்கீட்டின் வரலாற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிந்துகொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.