வெனிசுலாவில் நடந்த தேர்தலில் தற்போதைய அதிபர் நிக்கோலஸ் மதுரோ வெற்றிப் பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. அதே நேரத்தில், அதிபர் நிக்கோலஸ் மதுரோவை எதிர்த்து போட்டியிட்ட கோன்சாலஸ் வெற்றிப் பெற்றதாக , எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ கூறி இருக்கிறார். வெனிசுலாவில் நடந்த அதிபர் தேர்தல் முடிவுகளில் ஏற்பட்ட இந்த குளறுபடியால் குளறுபடி ஏற்பட்டுள்ளது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
வெனிசுலா அதிபராக நிக்கோலஸ் மதுரோ 2013ம் ஆண்டு பதவி வகித்து வருகிறார். தனது அரசியல் வழிகாட்டியான முன்னாள் அதிபர் ஹியூகோ சாவேஸுக்குப் பிறகு பதவியேற்றதிலிருந்து தொடர்ந்து வெனிசுலாவின் உச்சபட்ச அதிகாரத்தில் இருந்து வருகிறார்.
கடந்த முறை அதிபர் தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடக்கவில்லை என்ற குற்றச் சாட்டு சர்வதேச அளவில் பரவலாகக் கூறப் பட்டது. இதனால், பல உலக நாடுகள் நிக்கோலஸ் மதுரோவை அதிபராக அங்கீகரிக்க மறுத்துவிட்டன. மேலும் வெனிசுலா மீது அமெரிக்கா உட்பட சில நாடுகள் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தன.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை வெனிசுலாவில் அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது.
தேர்தல் கருத்துக்கணிப்புகளுக்காக பெயர் பெற்ற அமெரிக்காவின் எடிசன் ரிசர்ச்சின் கருத்துக்கணிப்பில், எதிர்க்கட்சி வேட்பாளர் கோன்சாலஸ் 65 சதவீத வாக்குகளைப் பெறுவார் என்றும், மதுரோ 31 சதவீத வாக்குகளைப் பெறுவார் என்றும் கணித்திருந்தது.
அதே போல் வெனிசுலாவில் உள்ளூர் நிறுவனங்கள் நடத்திய கருத்துக் கணிப்புக்களும், கோன்சலஸுக்கு 65 சதவீத வாக்குகளும், மதுரோவுக்கு 14 சதவீதக்கும் குறைவான வாக்குகளே கிடைக்கும் இருக்கும் என்று தெரிவித்தன.
பல கருத்துக் கணிப்புகள் எதிர்க்கட்சி வெற்றியைச் சுட்டிக்காட்டிய போதிலும், வெனிசுலா நாட்டின் தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு, அதிபர் நிக்கோலஸ் மதுரோ 51 சதவீத வாக்குகளுடன் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றதாக அறிவித்தது.
தனது ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, அதிபர் மாளிகையில் தோன்றிய மதுரோ, தாம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையின் வெற்றி என்று கூறி இருக்கிறார். மேலும் வெனிசுலாவின் தேர்தல் முறை வெளிப்படையானது என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதிபர் மாளிகைக்கு மேலே வானத்தில் ஒளிரும் ட்ரோன்கள் வண்ணமயமான ஒளியால் மதுரோவின் பிரகாசமான உருவத்தை ஏற்படுத்தி இருந்தன. நாடெங்கும் அதிபரின் ஆதரவாளர்கள் ,தங்கள் வெற்றியை பட்டாசு வெடித்து கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
அதே நேரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, கோன்சாலஸ் 70 சதவீத வாக்குகளைப் பெற்றதாகவும், மீதமுள்ள வாக்கு எண்ணிக்கையும் கோன்சாலஸ்ஸின் வெற்றியைக் காட்டுவதாகவும் கூறி யுள்ளார்.
மேலும் வெனிசுலாவுக்கு புதிய அதிபராக எட்மண்டோ கோன்சலஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்றும், இந்த வெற்றி முழு உலகமும் அறியும் என்றும் கோன்சலஸுடன் வெளியிட்ட ஒரு கூட்டு அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
இதற்கிடையே, அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவு, வெனிசுலா மக்களின் விருப்பத்தையோ அல்லது வாக்குகளையோ பிரதிபலிக்கவில்லை என்பதில் தீவிர கவலைகொண்டிருப்பதாக தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன், பதிவான வாக்குகளின் விரிவான அட்டவணையை வெனிசுலா தேர்தல் அதிகாரிகள் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
வெனிசுலாவின் அதிபர் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, அதிபர் மதுரோவும் எதிர்காட்சிகளும் ஒருவருக்கு ஒருவர் வெற்றி பெற்றதாகக் கூறுகின்றனர். இந்த சூழலில், டெஸ்லா நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் , சோசலிசத் தலைவர் என்று தன்னைத் தானே அறிவித்துக் கொண்டவரின் “பெரிய தேர்தல் மோசடி” என்று வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவைக் குற்றம் சாட்டியுள்ளார்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு அரசாங்கம் தோல்வியை ஒப்புக்கொள்ள உலகம் காத்திருக்கிறது என்று வெனிசுலா தேர்தல் முடிவு பற்றி அர்ஜென்டினா அதிபர் ஜேவியர் மிலே தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இதையும் எலான் மஸ்க் ரீ ட்வீட் செய்திருக்கிறார் .
இந்நிலையில், அதிபர் நிக்கோலஸ் மதுரோ வெற்றி பெற்றதாக அறிவித்த உடனேயே வெனிசுலா தலைநகரில் போராட்டம் வெடித்திருக்கிறது.
கடந்த திங்கட்கிழமை மாலை ஆயிரக்கணக்கான மக்கள் மத்திய கராகஸில் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். பலர் நகரைச் சுற்றியுள்ள மலைகளில் உள்ள சேரிகளில் இருந்து அதிபர் மாளிகையை நோக்கி பேரணியாக சென்றனர்.
அதிபர் மாளிகையை நெருங்கவிடாமல் தடுக்கும் நோக்கத்துடன் கராகஸ் வீதிகளில் பலத்த ராணுவ பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
வெனிசுலாவில் சர்ச்சைக்குரிய தேர்தல் முடிவை எதிர்த்துப் போராடும் மக்கள் மீது ராணுவத்தினர் கண்ணீர்ப்புகை வீசியும்,தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களைக் கலைத்து வருகின்றனர்.
ஆதரவாளர்கள் தெருக்களில் இறங்கவோ அல்லது வன்முறைச் செயல்களில் ஈடுபடவோ தாம் அழைப்பு விடுக்கவில்லை என்று எதிர்க்கட்சி வேட்பாளர் கோன்சலஸ் கூறியுள்ளார்.
மேலும், நாட்டில் ஏற்பட்டுள்ள ஜனநாயகத்துக்கு ஏற்பட்டுள்ள சவாலை எப்படி சமாளிப்பது என்பது பற்றி வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதையெல்லாம் அதிபர் நிக்கோலஸ் மதுரோ எப்படி கையாளுவார் என்பதையும் , நாட்டு மக்களுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தாமல் சர்வதேச சமூகத்தின் கேள்விகளுக்கு எப்படி பதிலளிப்பார் என்பதையும் , முன்கூட்டியே கணிப்பது சிரமம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.