தமிழகத்தின் உயிர் நாடியான மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் காவிரி நீர் பயணிக்கும் பகுதிகள் எவை? கடை மடை பகுதிக்கு எத்தனை நாட்களுக்குள் சென்றடையும் என்பது பற்றி பார்க்கலாம்.
காவிரி வங்க கடலில் சென்று சேரும் வரை அதன் பாதையை எல்லாம் வளமாக்கி மக்களுக்கு வளத்தை வாரி கொடுக்கிறது.
கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழக எல்லையான பிலிகுண்டு வந்தடையும் காவிரி நீர் மேட்டூர் அணையில் தேக்கி வைக்கப்படுகிறது. மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மின்சார உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டு பின் 82 கிலோமீட்டர் தொலைவில் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஜேடர்பாளையம் தடுப்பணையை அடைகிறது. பின்னர், தொடந்து 135 கிலோமீட்டர் தூரத்தை 14 மணி நேரம் பயணித்து கரூர் மாவட்டம் மாயனூரில் உள்ள கட்டளை கதவனையிணை அடைகிறது. இங்கு, கரூர் மாவட்ட விவசாய பயன்பாட்டிற்கு கிளை வாய்க்கால்கள் மூலம் பாசனத்திற்கு காவிரி நீர் திறந்துவிடப்படுகிறது.
பின்னர், திருச்சி மாவட்டத்திற்கு செல்லும் காவிரி, 177 கிலோமீட்டர் தூரத்தை 48 மணி நேரம் கடந்து முக்கொம்புவில் உள்ள மேலணைக்கு சென்றடைகிறது, அங்கிருந்து கல்லணைக்கு 12 மணி நேரத்தில் காவிரி நீர் சென்றடைகிறது.
கல்லணையிலிருந்து திறந்துவிடப்படும் நீர், வெண்ணாறு, காவிரி, உய்யகொண்டான் கால்வாய், கல்லணை கால்வாய் மற்றும் கொள்ளிடம் வழியாக செல்கிறது.
மேட்டூரிலிருந்து திறந்துவிடப்படும் நீர் கல்லணைக்கு மூன்று நாட்களில் சென்றடைகிறது. கல்லணையை சென்றடைந்த பின் நாமக்கல், கரூர், திருச்சி மாவட்டங்களில் கால்வாய்கள் மூலமும், கல்லணையிலிருந்து திறந்துவிடப்படும் நீர் வெண்ணாறு, கல்லணை கால்வாய் மூலம் டெல்டா மாவட்ட விவசாயத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
கல்லணைக்கு சென்றடையும் காவிரி 24 பிரிவுகளாகவும், வெண்ணாறு 17 பிரிவுகளாகவும், கல்லணைக் கால்வாய் 27 பிரிவுகளாகவும் சென்று டெல்ட்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயத்தை வாழ வைத்து வருகிறது.
கல்லணையிலிருந்து திறந்துவிடப்பட்டு, புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் மூலம் செல்லும் நீர், 107 ஏரிகளுக்கு சென்று பின்னர் கடைமடை பகுதிகளுக்கு 75 நாட்கள் கடந்த பின்னரே சென்றடைகிறது.
அதாவது, ஜூலை 28ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர், கல்லணைக்கு சென்றடைந்து அங்கிருந்து புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் மூலம் சென்று கடைமடை பகுதிக்கு வரும் நவம்பர் 8ம் தேதி சென்றடையும்.
அதேபோல், கல்லணையிலிருந்து உய்யகொண்டான் கால்வாய் மூலம் செல்லும் தண்ணீர், 60 நாட்கள் கடந்தே கடைமடை பகுதியை சென்றடைகிறது. அதாவது வரும் செப்டம்பர் 26ம் தேதியே கடைமடை பகுதிக்கு சென்றடைகிறது.
அதேபோல், உய்யகொண்டான் கால்வாய், வெண்ணாறு மற்றும் காவிரி மூலம் செல்லும் தண்ணீர், 45 நாட்கள் கழித்து, செப்டம்பர் 11ம் தேதி கடைமடை பகுதியை சென்றடைகிறது.