கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால், நாடே சோகத்தில் மூழ்கியுள்ள நிலையில், இந்திய வரலாற்றில் ஏற்பட்ட மிகவும் மோசமான நிலச்சரிவுகள் குறித்து பார்க்கலாம்.
உத்தராகண்ட் மாநிலம் கேதர்நாத் பகுதியில், கடந்த 2013-ம் ஆண்டு ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 5 ஆயிரத்து 700 பேர் உயிரிழந்தனர், 4 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மண்ணில் புதைந்தன.
கடந்த 1968-ம் ஆண்டு மேற்கு வங்க மாநிலம், டார்ஜிலிங்கில் ஏற்பட்ட நிலச்சரிவு, ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பலி வாங்கியது. இந்த நிலச்சரிவால் 60 கிலோ மீட்டர் தொலைவிற்கு தேசிய நெடுஞ்சாலை பாதிக்கப்பட்டது.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் கடந்த 1948-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஏற்பட்ட கனமழை காரணமாக, ஒரு கிராமமே மண்ணில் புதையுண்டது. இதில், 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
ஒருங்கிணைந்த உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள மாப்லா கிராமத்தில் கடந்த 1998-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், தொடர்ந்து 7 நாட்களுக்கு நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 380-க்கும் அதிகமானோர் பலியாகினர்.
கடந்த 2014-ம் ஆண்டு, கனமழை காரணமாக மகாராஷ்டிர மாநிலம் மாலின் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 151 பேர் உயிரிழந்தனர்.
தற்போது கேரளாவின் வயநாடு மாவட்டம் நிலச்சரிவால் உருக்குலைந்துள்ள நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு லப்பாடி, புட்டுபலா, மலப்புரம் ஆகிய பகுதிகளில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், 61 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர்.
கடந்த 2020-ம் ஆண்டு கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்துக்கு உட்பட்ட பெட்டிமுடி தேயிலை தோட்ட குடியிருப்பில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது குடியிருப்பில் உறங்கிக் கொண்டிருந்த 65 தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் மண்ணில் புதைந்தனர்.