கேரளா நிலச்சரிவில் சிக்கி பலர் பலியான சம்பவத்திற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புதின் இரங்கல் செய்தியை அனுப்பியுள்ளார்.
கேரளாவின் வயநாட்டில் கடந்த 2 நாட்களாக கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதிப்பில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 200-ஐ கடந்துள்ளது. இதனிடையே, வயநாடு நிலச்சரிவு உயிரிழப்பு தொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புதின் இரங்கல் செய்தி அனுப்பியுள்ளார்.
அதில், கேரள நிலச்சரிவில் சிக்கி பலர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவிப்பதாக அதிபர் புதின் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்டுள்ள பயங்கர நிலச்சரிவில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலச்சரிவில் சிக்கி பலர் காணாமல்போனதாக வெளியாகும் தகவல் வேதனையை அளிக்கிறது என்றும், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
ஐநா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் ஐநா என்றும் துணை நிற்கும் என குறிப்பிட்டுள்ளது.