அமைதி பூங்காவாக இருந்த தமிழ்நாடு திமுக ஆட்சியில் மிக மோசமான நிலையில் உள்ளதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய அரசின் பட்ஜெட் குறித்து பெண் தொழில் முனைவோர்கள், பெண் வழக்கறிஞர்கள், பெண் பேராசிரியர்கள், மற்றும் பெண் சமூக ஆர்வலர்களிடம் விளக்கமளிக்கும் கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பாஜக தேசிய மகளிர் அணியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன்,
கொரோனா தொற்று காலத்திற்கு பிறகு வளர்ந்த நாடுகளே பொருளாதார ரீதியாக கடும் சவால்களை சந்தித்து வரக்கூடிய சூழ்நிலையில் அதிக மக்கள் தொகை கொண்ட நமது நாடு உலக அளவில் ஐந்தாவது பொருளாதார நாடாக உயர்ந்து இருக்கிறது.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்த அரசு கடந்த 10 ஆண்டுகளாக செயல்படுத்திய பல்வேறு அடிப்படை கட்டமைப்புகளால் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தி உள்ளது. இது உலக நாடுகள் இந்தியாவில் உற்பத்தி செய்யக்கூடிய வாய்ப்பைக் கொண்டு வந்துள்ளது.
அரசின் திட்டங்கள் ஒரு பைசா கூட ஊழல் செய்யப்படாமல் முழுமையாக மக்களுக்கு சென்று சேருகிறது என கூறிய அவர் தமிழகத்திற்கு மத்திய அரசு எந்த நிதியும் ஒதுக்கீடு செய்யவில்லை என திமுக அரசியல் காரணத்திற்காக தவறாக கூறி வருகிறது. தமிழக மக்கள் திமுக அரசு மீது அதிர்ச்சியில் இருக்கிறார்கள். இதனை திசை திருப்புவதற்காகவே மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக திமுகவினர் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
மத்திய அரசின் திட்டங்களில் அதிக பலன் அதிக அளவில் பயன்படக்கூடிய மாநிலம் தமிழகம் தான் என குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் உள்ள விமான நிலையத்தை மேம்படுத்த மத்திய அரசு நிதி கொடுக்க தயாராக இருந்த போதும் அரசின் கொள்கைக்கு மாறாக மாநில அரசு நாங்கள் விமான நிலையத்தை கட்டுவோம் என கூறுவது ஏற்புடையதல்ல. இது வேலை வாய்ப்பு மற்றும் வளர்ச்சியை பாதிக்கும் வகையில் உள்ளது என்றார்.
மேலும் கூறுகையில், தூத்துக்குடி வெளி துறைமுக வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு சுற்றுப்புற சூழல் தாக்கல் மதிப்பீடு உள்ளிட்ட பணிகள் முடிவடைந்த பின்னர் நிச்சயம் செயல்படுத்தப்படும். தமிழகத்தில் சட்ட ஒழுங்கு மோசமாக இருக்கின்றது அமைதி பூங்கா என்ற சொல்லக்கூடிய தமிழ்நாடு தற்போது திமுக ஆட்சியில் மிக மோசமாக உள்ளது என்று அவர் குற்றம் சாட்டினார்.
இந்த கூட்டத்தில் பாஜக தூத்துக்குடி மாவட்ட தலைவர் சித்ராங்கதன், மாநில ஓபிசி அணி துணைத் தலைவர் விவேக ரமேஷ் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்