வயநாடு நிலச்சரிவில் வீடுகள், உடைமைகளை இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 3வது நாளாக மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வயநாட்டில் நிலவும் நிலைமை குறித்து விவாதிக்க கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. வயநாடு பகுதியில் உள்ள அப்துல் கலாம் நினைவு மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர், தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன்,
மீட்புப் பணியில் ராணுவத்தின் முயற்சியை பாராட்டுவதாக கூறினார். மண்ணுக்கு அடியில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கு இயந்திரங்களை கொண்டு வருவது கடினமாக உள்ளதாக குறிப்பிட்டார்.
பெய்லி பாலத்தின் கட்டுமான பணிகள் பெருமளவில் நிறைவடைந்துள்ளதாக குறிப்பிட்ட பினராயி விஜயன், காணாமல் போனவர்களை தேடும் பணி ஆற்றில் தொடர்வதாக கூறினார்.
பேரிடரில் இருந்து மீட்கப்பட்டவர்கள் தற்காலிகமாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், முந்தைய சூழ்நிலைகளில் செய்தது போல் விரைவில் மறுவாழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், உயிர் பிழைத்தவர்களுக்கு உளவியல் ரீதியான ஆதரவை வழங்குவது மிக முக்கியமானது எனக்கூறிய அவர், நோய்த் தொற்று பரவாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.