பலுசிஸ்தானின் பிரச்னைக்குரிய மாகாணமாக உள்ள பலுசிஸ்தானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இதையடுத்து, அவர்களை ஒடுக்க ராணுவம் அடக்குமுறையில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ளது பலுசிஸ்தான். பலுச்சிஸ்தான் என்றால் ‘பலோச்சின் நிலம்’ என்று பொருள்படும். இதனால் பலூச் என்று அழைக்கப்படும் அதன் குடிமக்களின் பெயரால் அந்த மாகாணம் அழைக்கப்படுகிறது.
பெரும்பாலும் பலூச்சி மொழி பேசும் சன்னி முஸ்லிம்களே அதிகம் வாழ்கின்றனர். பாகிஸ்தானின் மொத்த பரப்பளவில் 44 சதவீதத்தை தன்னகத்தே கொண்ட பலுசிஸ்தான் பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமாகும்.
ஆனால் பாகிஸ்தானின் மொத்த மக்கள்தொகையில் பத்து சதவீதத்திற்கும் குறைவான மக்களே பலுசிஸ்தானில் வசித்து வருகின்றனர்.
பலுசிஸ்தான், பாகிஸ்தானில் மிகவும் பின்தங்கிய மற்றும் வளர்ச்சியடையாத பகுதிகளில் ஒன்றாகும். சொல்லப் போனால், பாகிஸ்தானில் மிகவும் பின்தங்கிய 20 மாவட்டங்களில் 18 மாவட்டங்கள் பலுசிஸ்தானில்தான் உள்ளன .
பலுசிஸ்தானில் வாழும் மக்களில் 48 சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கின்றனர், மேலும் 88 சதவீத பலுசிஸ்தான் மக்கள் அதிக அளவில் வறுமையில் தவித்து வருகின்றனர்.
பலுசிஸ்தானின் மக்கள்தொகையில் 20 சதவீத மக்களுக்கு மட்டுமே பாதுகாப்பான குடிநீர் வசதி கிடைக்கிறது. மேலும் பலுசிஸ்தானில் 25 சதவீத கிராமங்களில் மட்டுமே மின்வசதி உள்ளது
பலுசிஸ்தானில் நான்கில் மூன்று பங்கு பெண்களும், பத்து வயதுக்கு மேற்பட்ட மொத்த மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் கல்வியறிவற்றவர்களாக இருக்கிறார்கள்.
இந்த சூழலில், பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற அமைப்பினர், பல ஆண்டுகளாக பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். பலுசிஸ்தானில் உள்ள இயற்கை வளங்களை பாகிஸ்தான் மற்றும் சீன அரசுகள் சுரண்டுவதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அதிக கனிம வளங்கள் நிறைந்திருந்தாலும், பலுசிஸ்தான் மக்கள் நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்டு, துயரத்திலும், கடும் வறுமையிலும் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதற்கு காரணம் பாகிஸ்தானில் நடக்கும் பஞ்சாபி மற்றும் சிந்தி ஆதிக்கம் செலுத்தும் தேசிய அரசியல் தான் என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.
பாகிஸ்தான் மக்கள் தொகையில் பலுசிஸ்தான் மக்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் பலுசிஸ்தானின் குரல் இஸ்லாமாபாத்தில் காதில் ஒருபோதும் கேட்கப்படவில்லை என்றும் , தேசிய அரசியலில், எப்போதும் ஓரங்கட்டப் படுவதாக பலூச் மக்கள் உணர்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
பொருளாதார ரீதியாக சுரண்டப்படும் மாகாணமான இருக்கும் பலுசிஸ்தான் நீண்ட காலமாகவே புறக்கணிக்கப்படுவதால் மக்கள் அரசுக்கு எதிராக தனி நாடு கோரிக்கையுடன் தீவிரமாக போராடி வருகிறார்கள்.
பலுசிஸ்தானின் குவாதர் துறைமுகத்தைப் பயன்படுத்தி, மத்திய கிழக்கிற்கான மாற்று வர்த்தகப் பாதையாக சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டத்தைச் சீனா கருதுகிறது. இந்த திட்டம், பலுசிஸ்தானில் நீண்ட தொடர் போராட்டங்கள் மற்றும் சீனத் தொழிலாளர்கள் மீதான போராளிக் குழுக்களின் தாக்குதல்களால் பின்னடைவை சந்தித்து வருகிறது.
இதையடுத்து. பாகிஸ்தான் ராணுவம் பலூச்சி மக்களைத் தீவிர வன்முறை மற்றும் இராணுவ நடவடிக்கை மூலம் ஒடுக்கி வருகிறது.
தங்கள் உரிமைகளுக்காக போராடும் பலூச்சி மக்களில் பலரைச் சட்டத்திற்குப் புறம்பாக பாகிஸ்தான் இராணுவ வீரர்களால் கொல்லப்படுகின்றனர். பலர் பலவந்தமாக காணாமல் போகிறார்கள். இராணுவத்தினரால் கடுமையான சித்ரவதைக்கு ஆளாகிறார்கள். பெரும்பாலானோர் மனித உரிமை மீறல்களுக்கு தொடர்ந்து உட்படுத்தப்படுகிறார்கள்.
கடந்த 17 ஆண்டுகளில் 15,000க்கும் மேற்பட்டோர் சட்டத்திற்கு புறம்பாக கொல்லப்பட்டுள்ளனர் என்றும் கிட்டத்தட்ட 5 லட்சம் பலூச் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து வீட்டை வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றும் ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
பலுசிஸ்தான் 227 நாட்களுக்கு ஒரு சுதந்திர நாடாக இருந்தது, பாகிஸ்தான் வலுக்கட்டாயமாக பலுசிஸ்தானை தன்னுடன் இணைத்தது. 1948 இல் பாகிஸ்தானின் ஒரு பகுதியாக மாறியதில் இருந்து பலுசிஸ்தான் தொடர்ந்து வறுமையையும் வன்முறைகளையும் அமைதியின்மையையும் எதிர்கொண்டு வருகிறது.
பலூச் மக்கள் பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெற விரும்புகின்றனர். தனித்துவமான இன அடையாளங்களுடன் ஒரு தனி அந்தஸ்து உடைய நாடாக உரிமை போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தங்களின் நியாயமான போராட்டத்தைச் சர்வதேச சமூகம் ஆதரிக்க வேண்டும் என்று பலுசிஸ்தான் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.