தமிழகத்தில் உள்ள ஏராளமான திருக்கோயில்களில் இந்தக் கோயில் தான் குபேர ஸ்தலம் என்று போற்றப் படுகிறது. செல்வ வளங்களை அள்ளி வழங்கும், அற்புத கோயிலை பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
தமிழகத்தில் தேவாரப் பாடல் பெற்ற திருக்கோயில்கள் மொத்தம் 276 ஆகும் . அப்படி தேவராப் பாடல் பெற்ற தலங்களில் 84 வது திருத்தலமாக இக் கோயில் விளங்குகிறது.
திருவாரூரில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் கீழ் வேளூர் என்னும் ஊரில் அமைந்துள்ள இக்கோயில் சோழ நாட்டில் காவிரியின் தென் கரையில் உள்ள திருக்கோயில்களில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக திகழ்கிறது.
63 நாயன்மார்களில் ஒருவரான கோச்செங்கண் சோழ அரசரால் இக்கோயில்,
யானைகள் ஏற முடியாத வகையில் குன்றின் மீது 18 படிகளுடன் சுமார் 21 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. எனவே இக்கோயில் சித்திரகூட பர்வதம் என்றும் அழைக்கப்படுகிறது.
முன்னொரு காலத்தில், அமுதம் பெறுவதற்காக தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலைக் கடைந்தனர். அப்போது அமுதத்தின் ஒரு துளி, பூலோகத்தில் இரண்டு இடங்களில் விழுந்ததாக நம்பப் படுகிறது.
வடஇந்தியாவில் அது விழுந்த இடம் வட பத்ரிகாரண்யம் என்றும் , தென் இந்தியாவில் விழுந்த இடம் தென் பத்ரிகாரண்யம் என்றும் அழைக்கப் படுகிறது.
வடக்கே அமுதத்தின் துளி விழுந்த இடமே இன்று பத்ரிநாத் என்று அழைக்கப்படுகிறது. தெற்கே அமுதத்தின் துளி விழுந்த இடமே இந்த குபேர ஸ்தலமாக விளங்குகிறது.
பத்ரி என்றால் இலந்தை மரத்தைக் குறிக்கும். எனவே இக்கோயிலின் தல மரமாக இலந்தை மரமே அமைந்திருக்கிறது.
முருகப்பெருமான் இத்தலத்தில் வந்து சிவபெருமானை வழிபட்டதால், இத்தலம் வேலூர் என்றும் அழைக்கப்படுகிறது.
கிழக்கு நோக்கிய 7 அடுக்கு ராஜகோபுரத்தைக் கடந்து சென்றால், பலி பீடம், கொடி மரம், நந்தி ஆகியவை காணப்படுகின்றன. இரண்டு பிரகாரங்கள் உள்ள இக்கோயிலில் தல விநாயகராக பத்ரி விநாயகர் உள்ளார்.
இத்தல முக்குறுணி விநாயகப் பெருமான் (சுந்தர விநாயகர்) மிகவும் சக்தி வாய்ந்தவர். சங்கடஹர சதுர்த்தி நாளில் இவருக்கு விசேஷமாக நடைபெறுகிறது.
கோயிலின் திருச்சுற்றில் அறுபத்துமூவர், ஜுரதேவர் சந்நிதிகளைத் தொடர்ந்து நவக்கிரகங்கள் உள்ளன. அடுத்து, அகஸ்தீஸ்வரர், விஸ்வநாதர், மகாலட்சுமி, ஜம்புகேஸ்வரர், கைலாசநாதர், பிரஹதீஸ்வரர், அண்ணாமலை ஈஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், குபேரர், சோளீஸ்வர், விசுவநாதர், சூரியர் உள்ளிட்ட சந்நிதிகள் காணப்படுகின்றன. இத்திருச்சுற்றில் அம்மன் சந்நிதி உள்ளது. அருகே நடராஜர் சபை உள்ளது. மகாமண்டபத்தில் தெற்கு நோக்கி உற்சவரான கல்யாணசுந்தரரும், நர்த்தன கணேசரும் அருள்பாலிக்கின்றனர்.
கோவிலின் உள்ளே வசந்த மண்டபம் காணப்படுகிறது. தலவிநாயகர் பத்ரி விநாயகர், அத்துடன் சுந்தர விநாயகரும் உள்ளார். தட்சிணாமூர்த்தி பழமையானது.
இத்தலத்தின் மூலவரான கேடிலியப்பர் சுயம்புத் திருமேனியுடன் பெரிய ஆவுடையார், மெல்லிய பாணத்துடன் லிங்க உருவில் காட்சி தருகிறார். இவருக்கு புனுகுசட்டம், சாம்பிராணி தைலம் மட்டுமே சார்த்தப்படுகிறது.
தேவர்கள் இத்தலத்தில் மார்கழி அமாவாசையன்று தியாகேசரை நிறை பணி சாத்தி வழிபடுவதாகக் கூறப் படுகிறது.
அம்மை சுந்தரகுஜாம்பாள் என்றும், வனமுலை நாயகி என்றும் அழைக்கப்படுகிறாள். சாந்த சொரூபியான சுந்தர குஜாம்பிகை, பத்ரகாளியாகத் திருவுருவம் கொண்டு, வடதிசை நோக்கி பத்து திருக்கரங்களுடன் பூஜை செய்யும் முருகனுக்கு இடையூறு வராமல் காத்து நின்றார். இதனால் இத்தல அன்னைக்கு ‘அஞ்சு வட்டத்தம்மன்’ என்ற திருநாமமும் உண்டு.
பாலசுப்பிரமணியராய் முருகனும் ஒரு திருமுகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு வடக்கு நோக்கி தவக் கோலத்தில் காட்சி அளிக்கிறார்.
ஒரு தீபாவளி நாளில் தான் இத்தலத்து சிவபெருமானை வழிபட்டு செல்வத்துக்கு ஸ்ரீகுபேரன் அதிகாரம் பெற்றான்.
இந்தக் காரணத்தால் ஒவ்வொரு தீபாவளி அன்றும் பலவித பட்சணங்களுடன் இங்கே குபேர பூஜை வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
மகாலக்ஷ்மி, இங்கு இலந்தை மரமாக விளங்குவதால் ஸ்ரீகுபேர பகவானும் இத்தலத்தில் நித்ய வாசம் செய்கின்றான்.
சித்ரா பவுர்ணமியில் பிரமோத்சவம் நடைபெறுகிறது. ஆடி வெள்ளி, ஆடிப்பூரம், நவராத்திரி, தீபாவளி, வருடப்பிறப்பு, பொங்கல், மாசிமகம், பங்குனி உத்திரம் ஆகிய விசேஷ நாட்களில் அம்பிகைக்கு அபிஷேக ஆராதனைகள் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெறுகிறது.
கீழ்வேளூர் இறைவன் கேடிலியை நாடுபவர்கள் தன் வாழ்வில் கேடில்லாமல் இருப்பர்’ என்று அப்பர் சுவாமிகள் தம் தேவாரத்தில் கூறுகிறார்.
நாமும் கேடிலியப்பர் வணங்கி நல்ல செல்வ வளம் பெறுவோம்.