அமெரிக்காவின் போயிங் விமான நிறுவனம், சீனர்களை விட இந்தியர்களுக்கே அதிக வேலைவாய்ப்புகளுக்கு முன்னுரிமை அளித்திருக்கிறது. இதற்கான காரணம் என்ன? இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
அமெரிக்கா,சீனா,மற்றும் இங்கிலாந்துக்கு அடுத்தப் படியாக உலகின் நான்காவது பெரிய விமானச் சந்தையாக இந்தியா உள்ளது.விரைவில் இங்கிலாந்தைப் பின்னுக்குத் தள்ளி மூன்றாவது பெரிய விமானப் பயணிகள் சந்தையாக இந்தியா உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
தெற்காசியாவின் விமானங்களுக்கான தேவை கணிசமாக உயரும் என்றும், 2043 ஆண்டுக்குள் 2,835 புதிய விமானங்கள் தேவைப்படும் என்றும், அதில் இந்தியாவின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என்றும் கணிக்கப் பட்டுள்ளது.
வரும் ஆண்டுகளில் விமானப் போக்குவரத்து துறையில் சர்வதேச அளவில் இந்தியா வேகமாக வளர்ந்து வரும் சந்தையாக இருக்கும் என்றும் கணிக்கப் பட்டுள்ளது.
ஏற்கெனவே,உலகின் முன்னணி விமான உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான போயிங் , வரும் ஆண்டுகளில் 31,000 க்கும் மேற்பட்ட விமானிகள் மற்றும் 26000க்கும் மேற்பட்ட மெக்கானிக்கள் தேவைப்படும் என்று தம் கணிப்பை வெளிப்படுத்தி இருந்தது.
இவை தவிர, கேபின் க்ரூ,பொறியாளர்கள், தொழில் நுட்ப வல்லுநர்கள், விமான நிலைய ஊழியர்கள், சரக்கு கையாளும் நிபுணர்கள் மற்றும் பணியாளர்கள், பாதுகாப்பு மற்றும் நிர்வாக ஊழியர்கள் என ஏராளமான விமானத் துறை சார்ந்த பணியாளர்கள் தேவைப்படுகின்றனர்.
இந்தியாவின் விமானப் போக்குவரத்து வளர்ந்து வரும் நிலையில் ,இந்த வளர்ச்சிக்கு இணையான திறமையான மனித வளங்களும் தேவைப் படும். திறமையான மனிதவளத்தைப் பயிற்றுவிப்பதற்கு பெரிய உள் கட்டமைப்பு,மற்றும் முறையான பயிற்சி கூடங்கள் தேவைப் படும்.
இந்நிலையில், போயிங் சுகன்யா திட்டத்தை பிரதமர் மோடி பெங்களுருவில் தொடங்கி வைத்திருக்கிறார். வளர்ந்து வரும் விமானப் போக்குவரத்துத் துறையில் இந்தியா முழுவதிலும் இருந்து அதிக பெண் குழந்தைகள் நுழைவதை ஆதரிக்கும் நோக்கில் போயிங் சுகன்யா திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்திருக்கிறது.
இந்த திட்டம் இந்தியா முழுவதும் உள்ள பெண்களுக்கு அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) துறைகளில் முக்கியமான திறன்களைக் கற்றுக்கொள்வதற்கும், விமானத் துறையில் உள்ள வேலைகளுக்குப் பயிற்சி பெறுவதற்கும் அதிகமான வாய்ப்புகளை வழங்கி வருகிறது.
அமெரிக்காவிற்கு வெளியே போயிங் நிறுவனத்தின் மிகப் பெரிய முதலீடாக , 43 ஏக்கரில் அதிநவீன போயிங் இந்தியா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மையம் (BIETC) வளாகத்தைத் திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி, இந்தியாவின் விமான ஓட்டிகளில் 15 சதவீத பேர் பெண்கள் என்று பெருமிதத்தோடு குறிப்பிட்டிருந்தார். இது உலக சராசரியை விட மூன்று மடங்கு அதிகம் என்பது ஆச்சரியமான உண்மை.
கடந்த டிசம்பரில், 6,000க்கும் அதிகமான இந்திய பணியாளர்களை போயிங் நிறுவனம் வேலைக்கு அமர்த்தி இருந்தது. மேலும் 13,000 க்கும் அதிகமான இந்தியர்களை போயிங் அதன் விநியோகச் சங்கிலிகளில் பணியமர்த்தி உள்ளது.
சீனாவுடனான அமெரிக்காவின் உறவில் சிக்கல்கள் ஏற்பட்டிருக்கும் நிலையில், போயிங் நிறுவனம், விமான பொறியியல் மற்றும் வடிவமைப்பு வளர்ச்சிக்காக இந்தியாவை நோக்கி அதிகளவில் திரும்பியுள்ளது.
வளர்ந்து வரும் இந்தியாவின் பயணிகள் விமானப் போக்குவரத்து சந்தையைத் தனக்கு ஒரு முக்கிய வாய்ப்பாக போயிங் நிறுவனம் கருதுகிறது.
அதன் ஒரு பகுதியாக, கடந்த புதன் கிழமை , போயிங் நிறுவனம் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இந்தியாவில் 58 பொறியியல் பணியிடங்கள் உட்பட 83 பணியிடங்கள் இந்தியர்களுக்காக ஒதுக்கப் பட்டிருந்தன. ஆனால் சீனர்களுக்கு வெறும் 5 பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப் பட்டிருந்ததன.
சீனாவை விட கிட்டத்தட்ட 19 மடங்கு அதிகமான பொறியியல் பதவிகளை இந்தியர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது, பலரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.
1916ம் ஆண்டிலிருந்து வலிமையாக தொடரும் சீனாவுடான போயிங்கின் நல்லுறவில் 2018-ம் ஆண்டு லயன் ஏர் விமான விபத்து மற்றும் 2019 ஆம் ஆண்டு எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விபத்துகளைத் தொடர்ந்து, சிக்கல் எழுந்தது.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் இணை அமைச்சர் முரளிதர் மொஹோல், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், 25 போயிங் 737 மேக்ஸ் விமானங்களையும், ஸ்பைஸ்ஜெட் 7 விமானங்களையும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஆகாச ஏர், 24 மேக்ஸ் விமானங்களையும் மொத்தமாக 56 போயிங் 737 மேக்ஸ் விமானம் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டு இயக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
உலகின் முன்னணி விமான நிறுவனமான போயிங் இந்தியா பக்கம் திரும்பி இருப்பதால், இந்தியாவின் பயணிகள் விமான போக்குவரத்து துறையில் பெரும் வளர்ச்சி நிச்சயம் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.