ஆடிப்பெருக்கை ஒட்டி திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில், ஏராளமானோர் பூஜை செய்து வழிபட்டனர்.
காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில், ஆண்டுதோரும் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு காவிரியில் தண்ணீர் அதிகமாக திறந்து விடப்பட்டுள்ளதால், விவசாயிகளும், பொதுமக்களும், உற்சாகத்துடன் ஆடிப்பெருக்கை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், திருச்சி ஸ்ரீரங்கத்திலுள்ள அம்மா மண்டபம் படித்துறையில் ஏராளமானோர் சிறப்புப் பூஜை செய்து வழிபட்டனர். தலைவாழை
இலையிட்டு, காப்பரிசி, காதோலை, கருகமணி உள்ளிட்ட பொருட்களை வைத்து படையலிட்டனர். மேலும், புதுமண தம்பதிகள் காவிரி தாயை வணங்கி புதிய மஞ்சள் கயிறு அணிந்து வழிபட்டனர்.
அம்மா மண்டபம் படித்துறை, சிந்தாமணி ஓடத்துறை, அய்யாளம்மன் படித்துறை ஆகிய இடங்களில் படிக்கட்டுகள் வரை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், பொதுமக்கள் ஆற்றில் இறங்க வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.