ஆடிமாதம் அம்மன் மாதம் என்று அழைக்கப் படுகிறது . இந்த ஆடி மாதத்தில் ஆடி பௌர்ணமி, ஆடி அமாவாசை, ஆடிக் கிருத்திகை என்று ஏராளமான திருவிழாக்கள் இருந்தாலும் , ஆடி பெருக்கு – முதன்மையாக திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. ஆடி பெருக்கு ஏன் கொண்டாடப் படுகிறது ? அந்த நாளின் சிறப்பம்சம் என்ன ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஆடி மாதத்தில் தான் சூரியன் தன் தென் திசை பயணத்தைத் தொடங்குகிறான். ஆடி மாதத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். மழைப் பொழிவால் காவிரி நதியில் தண்ணீர் பெருக்கெடுத்து வெள்ளம் போல் ஓடும்.
தங்கள் வாழ்வைச் செழிப்பாக்கும் காவிரிக்கு நன்றி செலுத்தும் விதமாக, கரையோரங்களில் வாழும் மக்கள் கொண்டாடும் விழா தான் ஆடி பெருக்கு .
பெருக்கு என்றால் பெருக்குதல் என்று அர்த்தம். ஆகவே இந்நாளில் காவிரியை வணங்கினால் வாழ்வில் செல்வம் செழிக்கும் என்று கூறப்படுகிறது.
ஆடிப்பெருக்கு, பதினெட்டாம் பெருக்கு என்றும், ஆடிப்பதினெட்டு என்றும் அழைக்கப் படுகிறது. ஆடி மாதத்தில் 18 வது நாள் என்று நாளின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு நடத்தப்படும் ஒரே விழா இதுவாகும்.
இந்நாளில், காவிரித்தாய் அனைத்து நீர்நிலைகளிலும் வியாபித்திருப்பாள். அதனால் தான் ஆடிப்பெருக்கு புண்ணிய நாளில் அனைத்து நீர் நிலைகளுக்கும் பூஜை செய்து வழிபடுவது வழக்கமாக உள்ளது.
ஆடிப்பெருக்கு நாளில், விதைத்தால் தைப் பொங்கலுக்கு அறுவடை செய்யலாம் என்பது தமிழர்களின் வழக்கம் ஆகும்.
ஆடி பட்டம் தேடி விதை என்பதற்கு ஏற்ப இந்நாளில் நதிகளில் நீராடி நதிக்கு பூஜை செய்து தமிழகம் எங்கும் உள்ள விவசாயிகள் தங்கள் விவசாய வேலையைத் தொடங்குவார்கள்.
ஆடி பதினெட்டுக்கு பத்து நாட்கள் முன்னதாக, நவதானியங்களை ஒரு தாம்பாளத்தில் தூவி, மண் அல்லது எரு கலந்து மூடி வைப்பார்கள். வெண்மையாக முளைத்து வளர்ந்த நிலையில், அதை முளைப்பாரி என்பார்கள்.
ஆடி18 ஆம் நாள் அன்று உச்சி வேலைக்குப் பிறகு முளைபாரியை ஏந்தி ஊர்வலமாக ஆற்றுக்குச் செல்வார்கள். ஆற்றுக்கரையில், தூய்மையான இடத்தில், பசுஞ்சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைப்பார்கள். பிள்ளையாருக்கு முன் முளைப்பாரியை வரிசையாக வைப்பார்கள். பச்சரிசி, சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் போட்டு, நீர் ஊற்றிக் கலந்து விநாயகரின் முன்னால் வைத்து வழிபாடு செய்வார்கள்.
வயதில் முதிய சுமங்கலி ஒருவர், அங்கு வந்திருக்கும் பெண்களுக்கு மஞ்சள் தடவிய நூலைக் கொடுப்பார். சிலர் கைகளிலும், சிலர் கழுத்திலுமாக கட்டிக் கொள்வார்கள். அதன் பின், அவரவர் கொண்டு வந்த முளைப்பாரி, பனை ஓலைகளால் செய்யப்பட்ட வட்டமான காதோலை, கருகமணி ஆகியவற்றை ஆற்று நீரில் விட்டு காவிரித் தாயை வணங்கி வழிபடுவார்கள்.
இப்படி வழிபட்டு காவிரி தாயின் ஆசியினை பெற்றால் திருமணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்றும், திருமணம் ஆனவர்களின் கணவர்களின் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பது தமிழகப் பெண்களின் நம்பிக்கை.
அகத்தியரால் கமண்டலத்தில் சிறை பிடிக்கப்பட்ட காவிரி நதி காக்கை உருவில் வந்த விநாயகரால் விடுவிக்கப்பட்டு பிரம்மகிரி மலைப்பகுதியில் ஓடியதாக புராண வரலாறு. எனவே தான் இந்த நல்ல நாளில் விநாயகப் பெருமானை வணங்குவது வழக்கமாக இருக்கிறது.
ஆடி பெருக்கு நாளில், தொடங்கும் செயல்களும் வாங்கும் பொருட்களும் பன்மடங்கு பெருகும் என்கிறது தர்ம சாஸ்திரம்.