தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களிலும் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆடிப்பெருக்கு விழாவை ஒட்டி தஞ்சை மாவட்டம் திருவையாறில் உள்ள காவரி கரை படித்துறையில் புதுமண தம்பதிகள் தங்களது திருமண மாலையை காவிரி ஆற்றில் விட்டு, மஞ்சள் கயிறு அணிவித்தும் காவிரி தாயை வழிபட்டனர். இதையடுத்து சூரிய பூஜை செய்து விட்டு அங்கிருந்த முதியவர்களிடம் ஆசிர்வாதம் பெற்று சென்றனர். காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு செல்வதாலும், பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுவதாலும் பாதுகாப்புப் பணிக்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஆர்.எம் காலனியில் உள்ள வெக்காளியம்மன் கோவிலில் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் பூக்குழி இறங்கியும், அலகு குத்தியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதையடுத்து கோயிலுக்கு வருகை தந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு தினத்தை ஒட்டி நீர்நிலைகளிலும் கோவில்களில்ம் பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.அறந்தாங்கி, மணமேல்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் தேங்காய், பழம் உள்ளிட்டவை கொண்டு பக்தர்கள் பூஜைகள் நடத்தினர். இந்நிலையில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் நடவடிக்கையாக ஏராளமான காவல்துறையினர் பணியில் ஈடுபட்டனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் காவிரி ஆறு , அரசலாறு உள்ளிட்ட நீர் நிலைகளில் பக்தர்கள் இறைவழிபாடு நடத்தினர். ஆடிப்பெருக்கை ஒட்டி நடத்தப்பட்ட இந்த பூஜைகளில் பழங்கள், காப்பரிசி, காதோலை, கருகமணி, மஞ்சள் உள்ளிட்டவை படையலிடப்பட்டது.