தேச விடுதலைக்காக, இளம் வயதிலேயே உயிர் தியாகம் செய்த தீரன் சின்னமலை புகழை போற்றி வணங்குவோம் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், இந்தியச் சுதந்திரப் போரில், ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்டு வெற்றி கண்டவரும், இறுதி மூச்சு வரை தேச விடுதலைக்காகப் போராடியவருமான மாவீரர் தீரன் சின்னமலையின் 219 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, இன்றைய தினம், ஓடாநிலையில் அமைந்துள்ள தீரன் சின்னமலை மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மலரஞ்சலி செய்து மரியாதை செலுத்தினோம்.
உடன், தீரன் சின்னமலை கூட்டமைப்பின் தலைவர் திரு. ஜெ.சின்னமலை கிருஷ்ணகுமார், தமிழக பாஜக சார்பில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சகோதர சகோதரிகள் பங்கேற்றனர்.
ஆங்கிலேயர்களுக்கு எதிராக, 1801 ஆம் ஆண்டு ஈரோடு காவிரிக் கரைப் போரிலும், 1802 ஆம் ஆண்டு ஓடாநிலை போரிலும், 1804 ஆம் ஆண்டு அரச்சலூர் போரிலும் பெரும் வெற்றி பெற்றவர். தீரன் சின்னமலை அவர்கள், கோவில்களுக்குச் செய்த திருப்பணிகள் அளப்பரியவை. சிவன் மலை, பட்டாலி, கவுண்டம்பாளையம் ஆகிய ஊர்களில் உள்ள கல்வெட்டுகள் அவர் அளித்த கொடைகளுக்கு சாட்சி. தன்னுயிரைப் பற்றிக் கவலையின்றி, தேச விடுதலைக்காக, இளம் வயதிலேயே உயிர்த்தியாகம் செய்த தீரன் சின்னமலை அவர்கள் புகழைப் போற்றி வணங்குகிறோம்.