ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவரான இப்ராஹிம் ஹனியே ஈரான் தலைநகர் டெஹ்ரானில் கொல்லப்பட்டதன் பின்னணி பற்றியும் , எப்படி கொல்லப்பட்டார் என்பது பற்றியும் புதிய அதிர்ச்சித் தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பல ஆண்டுகளாகவே, ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஒரு நிழல் யுத்தம் நடந்துவருகிறது. இஸ்ரேலுக்கு எதிராக தீவிரவாத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஈரான் நிதி மற்றும் ராணுவ உதவிகளை வழங்கி வருகிறது.
மேலும், யூதர்களுக்கு எதிராக தீவிரவாத தாக்குதல்களை நீண்ட காலமாகவே நடத்தி வரும் ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கும் ஈரான் பல்வேறு வகைகளில் உதவி செய்து வருகிறது.
கடந்த அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்களை ஹமாஸ் அமைப்பினர் நடத்தினர்.
200க்கும் மேற்பட்ட இஸ்ரேல் மக்களை பிணைக் கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் சிறை பிடித்து வைத்தனர். பிணை கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை.
இதற்கிடையே, ஈரானுக்கு எதிராகவும், ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிராகவும் இஸ்ரேல் அரசு தீவிர இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தச் சூழலில், ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் உள்ள ஈரான் அரசு இல்லத்தில் , ஹமாஸ் அமைப்பின் தலைவர் இப்ராஹிம் ஹனியே படுகொலை செய்யப் பட்டார்.
முதலில் , ஏவுகணை தாக்குதலால் இப்ராஹிம் ஹனியே கொலைசெய்யப்பட்டதாக ஈரான் அறிவித்தது. ஆனால் அதற்கான எந்த ஆதாரத்தையும் ஈரான் வெளியிடவில்லை. மேலும் இப்ராஹிம் ஹனியேயின் உடலைக் கூட உலகத்தின் பார்வைக்குக் காட்டவில்லை.
ஹமாஸ் தலைவர் படுகொலைக்கு இஸ்ரேல் தான் காரணம் என்று ஈரான்,துருக்கி, ஹிஸ்புல்லா ,ஹமாஸ் அமைப்புகள் மற்றும் சில இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களும் கருத்து தெரிவித்திருந்தன. ஆனால் இஸ்ரேல் அரசு இது குறித்து எந்த கருத்தையும் அதிகார பூர்வமாக கூறவில்லை.
இந்நிலையில், இஸ்ரேலின் உளவு அமைப்பான மொஸாட் தான் இப்ராஹிம் ஹனியே வின் படுகொலையை கனகச்சிதமாக செய்து முடித்திருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அரசு இல்லத்தில் இப்ராஹிம் ஹனியேவின் படுக்கையறையில் வைக்கப்பட்டிருந்த வெடிமருந்துகள் நிரம்பிய வெடிகுண்டை ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிக்கச் செய்துள்ளனர். இந்த வெடிகுண்டு வெடித்ததில் ஹமாஸ் தலைவரும் அவரது பாதுகாவலரும் பலியாகி இருக்கின்றனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இந்த படுகொலை நடந்திருக்கிறது. ஆனால் இப்ராஹிம் ஹனியேயின் மரணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த புதன்கிழமை காலையில் தான் வெளியானது.
இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் தங்கள் தலைவர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் கூறியது. மேலும் , ஈரான் ஊடகங்களில் ட்ரோன் மூலம் கொல்லப்பட்டதாகவும் , ஈரானுக்கு வெளியில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை தாக்குதல் மூலம் கொல்லப் பட்டதாகவும் வேறு சில செய்திகளும் வெளியிடப் பட்டன.
ஆனால் எல்லாமே தவறு என்றும், ஹமாஸ் தலைவர் தங்கி இருந்த இல்லத்தில் அவரது அறையில் வைக்கப்பட்ட வெடிகுன்டு சாதனம் வெடித்தே அவர் இறந்துள்ளார் என்று நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கிறது.
மேலும் (Axios ) அக்ஸியோஸ் என்னும் இணைய தளத்தில் இந்த படுகொலையை இஸ்ரேலின் மொஸாட் உளவுத் துறை எப்படி திட்டமிட்டு செய்து முடித்தது என்ற விவரங்களைப் பட்டியலிட்டு வெளியிட்டுள்ளது.
ஹமாஸ் தலைவர் தங்கியிருந்த அறையில் முன்கூட்டியே வெடிகுண்டு சாதனம் வைக்கப்பட்டு இருந்ததாகவும், AI எனப்படும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி வைத்த உயர்ரக தொழில்நுட்ப சாதனமே வெடிகுண்டு சாதனமாக பயன்படுத்தப் பட்டதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஈரானில் இருந்த மொசாட் பிரிவினரால் ஹமாஸ் தலைவர் அறையில் இருப்பது உறுதி செய்யப் பட்டதாகவும் அதன் பிறகே ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிகுண்டு வெடிக்கச் செய்ததாகவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன. மூன்று அறைகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
அமெரிக்காவுக்கோ அல்லது வேறு எந்த நட்பு நாடுகளுக்கோ இப்ராஹிம் ஹனியே வை கொல்லப் போவது பற்றி இஸ்ரேல் எதையும் முன்கூட்டியே தெரிவிக்கவில்லை எனத் தெரிய வருகிறது.
ஹனியேவின் படுகொலையானது, கடந்த அக்டோபர் 7ம் தேதி நடந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட இஸ்ரேல் மக்களுக்கு நீதி கிடைப்பதற்காகவும், பணயக்கைதிகள் விடுதலை ஒப்பந்தத்திற்கு இனி எந்த தடையும் இருக்க கூடாது என்பதற்காகவும் இப்ராஹிம் ஹனியே படுகொலை நடத்தப் பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
காசாவில் உள்ள ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரைக் காட்டிலும் ஹனியே பிணை கைதிகள் விடுதலை ஒப்பந்தத்தில் மிகவும் கடுமையான பார்வையைக் கொண்டிருந்தார் என்றும், மேலும் ஒப்பந்தம் ஏற்படுவதற்கு தடையாக இருந்தார் என்று கூறப் படுகிறது.
ஹமாஸ் தலைவர் இப்ராஹிம் கனியே தங்கியிருந்த அறைக்கு சில மாதங்களுக்கு முன்பே வெடிகுண்டு சாதனம் கொண்டு போகப் பட்டதாக தெரிய வருகிறது. ஈரானின் புரட்சிகர காவல் படையினரால் நடத்தப்படும் தெஹ்ரான் விருந்தினர் மாளிகைக்குள் வெடிகுண்டு இரகசியமாக கடத்தப்பட்டது எப்படி என்ற விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. ஈரான் புரட்சிகர காவல்படையில் சிலர் இந்த சதி திட்டத்திற்கு உதவியிருக்கலாம் என தெரிகிறது.
இந்த படுகொலை, ஈரானுக்கான உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு படையின் தோல்வி என்றும், புரட்சிகர காவல்படைக்கு குறிப்பிடத்தக்க அவமானம் என்றும் உலகளவில் பார்க்கப்படுகிறது.
இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு ஒரு சாதனை காரியத்தை செய்திருந்தாலும் , மத்திய கிழக்கு பகுதிகளில் போர் பதற்றத்தையும் அதிகரித்துள்ளது.