கட்டுமான திட்ட அனுமதி பெறுவதற்கான கட்டணங்கள் முன்னறிவிப்பு இன்றி, இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளதால், வீடுகள் விலையும் வெகுவாக அதிகரிக்கும் என கட்டுமானத்துறையினர் தெரிவித்துள்ளனர்
கட்டுமானத்துறையினரின் கோரிக்கையை ஏற்று, சுயசான்று அடிப்படையில் கட்டட அனுமதி வழங்கும் திட்டத்தை, தமிழக அரசு அண்மையில் தொடங்கியது.
இதன்படி, 2 ஆயிரத்து 500 சதுர அடி வரையிலான மனையில், 3 ஆயிரத்து 500 சதுர அடி வரையிலான வீடு கட்ட, சுயசான்று அடிப்படையில், இணைய வழியே உடனடியாக கட்டட அனுமதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
இதன்படி, சென்னையில் ஏற்கனவே இருந்த விகிதங்கள் அடிப்படையில், சதுர அடிக்கு, 56 ரூபாய் கட்டணம் வசூலிக்கலாம் என சென்னை மாநகராட்சி பரிந்துரைத்தது.
இதற்கான வரைவு அறிக்கை நகராட்சி நிர்வாகத்துறைக்கு அனுப்பப்பட்டது. ஆனால், நகராட்சி நிர்வாகத்துறையும், ஊரக வளர்ச்சி துறையும் வெளியிட்ட புதிய கட்டண விகிதங்கள் இதற்கு மாறாக இருந்தன.
அதாவது, சென்னை மாநகராட்சியில், சதுர அடிக்கு 100 ரூபாயும், பிற மாநகராட்சிகளில் சதுர அடிக்கு, 74 ரூபாய் முதல் 88 ரூபாயும், நகராட்சிகளில் சதுர அடிக்கு, 70 ரூபாய் முதல் 74 ரூபாய் வரையும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பேரூராட்சிகளில் சதுர அடிக்கு, 45 ரூபாய் முதல் 70 ரூபாய் வரையும், ஊராட்சிகளில் சதுர அடிக்கு, 15 ரூபாய் முதல் 27 ரூபாய் வரையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, 8 ஆயிரத்து 900 சதுர அடி கட்டடத்துக்கு அனுமதி வாங்க, நான்கரை லட்சம் ரூபாய் செலுத்தி வந்த நிலையில், தற்போது, ஒன்பது லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தும் நிலை எழுந்துள்ளதாக கட்டுமானத்துறையினர் புகார் தெரிவித்துள்ளனர்.