வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக கோரி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்து மாணவர்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தினர். அதேவேளையில், தியாகிகளின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு அளிப்பதில் ஷேக் ஹசீனா உறுதியாக இருந்ததால், அவர் பதவி விலகக் கோரி மாணவர்கள் நாடு முழுவதும் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வன்முறை ஏற்பட்டதால் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
நிலைமை எல்லையை மீறிச் சென்றதால், ஷேக் ஹசீனா பதவி விலகுமாறு ராணுவம் கெடு விதித்தது. மேலும், பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் போராட்டக்காரர்கள் நுழைந்ததால், ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ராணுவ ஹெலிகாப்டரில் தனது சகோதரி ஷேக் ரெஹானாவுடன் நாட்டை விட்டு வெளியேறினார். அவர்கள் திரிபுரா மாநிலம் அகர்தலாவில் தரையிறங்கியதாகவும், ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா அடைக்கலம் அளித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறியதை அறிந்த போராட்டக்காரர்கள், டாக்காவில் உள்ள அவரது தந்தையும், வங்கதேசம் உருவாக காரணமாக இருந்தவருமான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் சிலையை சேதப்படுத்தினர்.
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகியதை அடுத்து, அங்கு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
இதுதொடர்பாக அந்நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ராணுவத் தலைமைத் தளபதி வேக்கர்-உஸ்-ஜமான், பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா ராஜினாமா செய்துள்ளதால், ராணுவம் தலைமையில் இடைக்கால அரசு வங்கதேசத்தை வழிநடத்தும் என்றும் தெரிவித்தார்.
மேலும், போராட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து ராணுவம் விசாரிக்கும் என்று கூறிய அவர், மாணவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு வீடு திரும்பவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
வங்கதேசத்தில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதை தொடர்ந்து மேற்குவங்கம், வங்கதேச எல்லையில் எல்லைப் பாதுகாப்பு படையினர் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். குறிப்பாக கொல்கத்தாவில் எல்லைப் பாதுகாப்பு படை இயக்குநர் ஜெனரல் முகாமிட்டுள்ளார்.