வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள நிலையில், இதற்கு முன்பு இங்கு தஞ்சமடைந்த தலைவர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.
ஒரு நாட்டில் போரோ, கலவரமோ, பொருளாதார சிக்கலோ ஏற்படும் போது அந்நாட்டைச் சேர்ந்த மக்கள் அண்டை நாட்டுக்குச் சென்று தஞ்சமடைவதுண்டு. அவ்வாறு வருவோர் புலம்பெயர்ந்தவர்கள் என்றழைக்கப்படுகின்றனர். சில நேரங்களில் மக்கள் மட்டுமின்றி அண்டைநாடுகளின் மன்னர்கள், தலைவர்கள், மத குருமார்களும் அண்டை நாட்டிலோ அல்லது அடைக்கலம் தரும் நாட்டுக்கோ செல்வதுண்டு. தமக்கு எதிராக போராட்டமோ கிளர்ச்சியோ பெரிதாக வெடிக்கும் போது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அவ்வாறு செய்வார்கள். அப்படி இந்தியாவுக்கும் சிலர் வந்திருக்கிறார்கள்.
1950-களின் தொடக்கத்தில் நேபாளத்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்ட நிலையில் மன்னர் திரிபுரவன், இளவரசர் மகேந்திரா, பேரன் பிரேந்திரா ஆகியோர் அங்குள்ள இந்திய தூதரகத்தில் முதலில் தஞ்சம் அடைந்தனர். பின்னர் இந்திய விமானப்படை மூலம் பாதுகாப்பாக டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். ஓராண்டுக்குப் பிறகு மன்னர் திரிபுரவன் தமது நாட்டுக்கு திரும்பிச்சென்றார்.
1959-ஆம் ஆண்டு சீன ஆக்கிரமிப்பு காரணமாக திபெத் மதத் தலைவர் தலாய் லாமாவும் ஏராளமான மக்களும் இமயமலை வழியாக தப்பித்து இந்தியாவுக்கு வந்தனர். இன்று வரை இங்குதான் அவர்கள் வசிக்கின்றனர். திபெத்தில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய அரசாங்கம் சில சலுகைகளை வழங்கியிருக்கிறது.
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைவது ஒன்றும் புதிதல்ல. 1975-ஆம் ஆண்டு அவரது தந்தை உள்பட குடும்பத்தினர் பலர் கொல்லப்பட்ட போது ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்தது. 6 ஆண்டுகள் இங்கு வசித்த அவர், அவாமி லீக் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு வங்கதேசத்துக்குச் சென்றார்.
1980-களில் இலங்கையில் ஈழப்போர் நடந்து கொண்டிருந்த போது, தமிழ் போராளிக் குழுக்களைச் சேர்ந்த பத்மநாபா, டக்ளஸ் தேவானந்தா, வரதராஜபெருமாள் போன்றவர்கள் இந்தியாவில் தஞ்சம் புகுந்தனர். இதில் மிக நீண்டகாலம் இந்தியாவில் தலைமறைவாக இருக்க அனுமதிக்கப்பட்டவர் வரதராஜ பெருமாள்.
2015-ஆம் ஆண்டு மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது அதீப் அப்துல் கஃபூர் படகு மூலம் தப்பி இந்தியாவுக்கு வந்தார். எனினும் அவருக்கு அடைக்கலம் தர மறுத்து மாலத்தீவுக்கே திருப்பி அனுப்பியது இந்தியா.