தமிழக மீனவர்களின் பிரச்னைக்குத் தீர்வு காணப்படும் என மீனவர் சங்கப் பிரதிநிதிகளிடம் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளார்.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் இலங்கை கடற்படை கப்பல் மோதி, ராமேஸ்வரத்தை சேர்ந்த மலைச்சாமி என்ற மீனவர் உயிரிழந்தார். மேலும் புதுக்கோட்டைடையை சேர்ந்த நான்கு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், டெல்லியில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவ பிரதிநிதிகளுடன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்தார்.
தமிழக மீனவர்களின் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், மீனவ பிரதிநிதிகள் அளித்த கோரிக்கைகளில் சில வெளியுறவு அமைச்சகமும், சில கோரிக்கைகள் மீன்வளத் துறையையும் சார்ந்தது என்றார்.
மேலும், கூட்டு பணிக்குழு நியமிக்கப்பட்டு இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணப்படும் என்று அவர் உறுதியளித்தார்.