இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் ஆறு பேர் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், படகு ஓட்டுநருக்கு மட்டும் ஓராண்டு சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, ராமேஸ்வர மீனவர்கள் 7 பேர் கடந்த ஜூன் 23ஆம் தேதி இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் அவர்கள் சென்ற விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு ஊர்காவல்துறை நீதிமன்ற நீதிபதி நளினி சுபாஸ்கரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆறு மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து உத்தரவிட்டதுடன், படகின் ஓட்டுநருக்கு மட்டும் 4 கோடி ரூபாய் அபராதமும், ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.
இதனையடுத்து, சிறை தண்டனை விதிக்கப்பட்ட படகு ஓட்டுநர் மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், விடுதலை செய்யப்பட்ட 6 மீனவர்கள் இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.