ஜாமினில் கடந்த ஜூலை 31ஆம் தேதி விடுவிக்கப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை வரவேற்க அதிமுக நிர்வாகிகளை சிறை வாசல் வரை அனுமதித்த சிறைத்துறை ஏட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டதுடன், பணியில் இருந்த 3 காவலர்களுக்கும் விளக்கம் கேட்டு மெமோ கொடுக்கப்பட்டுள்ளது.
கரூரில், சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் கொடுத்து பத்திரப்பதிவு செய்த வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த ஜூலை 31ம் தேதி அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டபோது, சிறை விதிகளை மீறி 50க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் சிறையின் முக்கிய வாசலை அடைந்து, ஜாமினில் வெளியே வந்த எம்.ஆர்.விஜயபாஸ்கரை வரவேற்றனர்.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து, சிறை வளாகத்துக்குள் அதிமுக நிர்வாகிகளை அனுமதித்தது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில், அன்றைய தினம் சிறைத்துறை ஏட்டு கணேஷ்குமார் பணியில் இருந்தது தெரியவந்தது.
அவரை சஸ்பெண்ட் செய்ததுடன், மேலும் அங்கு பணியில் இருந்த காவலர்கள் காளிமுத்து, சக்திவேல், அசாருதீன் ஆகியோருக்கும் விளக்கம் கேட்டு ‘மெமோ’ கொடுக்கப்பட்டுள்ளது.