தமிழக அரசு விவசாயிகளின் நலனில் அக்கறை கொள்ளவில்லை என இயக்குநர் தங்கர் பச்சான் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை பின்பற்றி பனை, தென்னை மரங்களில் கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதி வழங்கிட வேண்டும், குமரி முதல் காஷ்மீர் வரை வேளாண் உற்பத்தி பொருட்களை எந்த தடையும் இன்றி விற்பனை செய்திட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளநிலையில், கள் கேரளாவிற்கு கொண்டு விற்பனை செய்ய அனுமதி கொடுக்க வேண்டும், கள்ளச்சாராய விற்பனை செய்யும் சமூக விரோதிகளோடு கள் விற்பனையாளர்களை ஒப்பிட்டு, அவமானப் படுத்தி வழக்கு போட கூடாது, மற்றும் நியாய விலை கடைகளில் விநியோகிக்கப்பட்டு வரும் பாமாயில் எண்ணெயை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் மற்றும் திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான், இயக்குனர் கௌதமன் ஆகியோர் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
சுமார் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த போராட்டத்தில் இயக்குனர் தங்கர்பச்சான் விவசாயிகளுக்கு ஆதரவாக உரையாடினார்.
அப்போது பேசிய அவர்,
முதல்வருக்கு என்ன தான் தெரியும்? என்னதான் புரியும்? ஒரு வேளாண் குடியில் இருந்து தான் அமைச்சர்கள் வந்திருக்கிறார்கள். ஆனால் என்ன போராட்டம் நடக்கிறது என்கிற சிந்தனையில் எங்களை அழைத்து பேசாமல் இருக்கிறார்கள்.
வெளிநாட்டிற்கு செல்கிறீர்களே, அங்கு என்ன செய்கிறீர்கள்? விவசாயிகள் நலனை அங்கு சென்று பார்க்க செல்கிறீர்களா? கூட்டம் கூட்டமாக சென்று சுத்தி பாத்துட்டு வரீங்க… விவசாயிகள் நான் விவசாயம் செய்யவில்லை என சொன்னால் ஒருநாள் தான் உங்கள் ஆட்சி, முடிஞ்சு போச்சு என அவர் பேசினார்.
சென்னைக்கு தேவையான நீர் 15 TMC, அது ஓரே நாளில் கடலில் கலக்கிறது, அதற்காக என்ன செய்கிறீர்கள்? எங்கள் ஊரில் விவசாய நிலத்தை எடுக்க விவசாய அமைச்சர் துடித்துக் கொண்டு இருக்கிறார்.. தமிழ்நாட்டில் செய்யக்கூடாத வேலைகளை செய்கிறீர்கள். எங்கு திரும்பினாலும் டாஸ்மாக் மற்றும் மருந்து கடைகளாக இருக்கிறது.
விவசாயிகளின் வாழ்க்கை பற்றி நினைத்துப் பார்த்தீர்களா?விவசாயிகளின் வாழ்க்கை முழுக்க பேரிடர் பேரிடர் பேரிடர்…. 1000 ரூபாய் கொடுத்து சிறந்த ஆட்சியை நீங்கள் செய்ய வேண்டாம்… 5 தென்னை மரங்கள் இருந்தால் போதும், அந்த வீட்டை அது காப்பாற்றி விடும் என அவர் பேசினார்.
பாமாயில் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து வருகிறது. அந்த மரத்தில் இருந்து எடுக்கப்பட்டு வரும் எண்ணெயை எதற்கு கொடுக்கிறீர்கள்? இதனால் கேன்சர் வருகிறது. ஒரு கிலோவை 100 ரூபாய்க்கு வாங்கி, 25 ரூபாய்க்கு கொடுக்கிறீர்கள்… கமிஷனுக்காக இதனை செய்கிறீர்கள்… முதல்வர் வீட்டில் பாமலினில் சமைக்கிறார்களா?? ஒரு கிலோவுக்கு 10 ரூபாய் போட்டால் எத்தனை கோடி? எத்தனை லட்சம்? கமிஷன் அடிக்கும் வேலையை தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவற்றிற்கெல்லாம் ஒரே தீர்வு, விவசாயிகளுக்கு கட்சியே கிடையாது. தேர்தலை புறக்கணிக்கிறோம்… மீண்டும் மீண்டும் இவர்களையே ஆட்சியில் உட்கார வைத்துவிட்டு தலையில் மன் அள்ளி போடுகிறோம் என அவர் பேசினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய பி ஆர் பாண்டியன்,
மத்திய அரசு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வேளாண் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய எந்த தடையும் இல்லை என சொல்லி இருப்பது போல தமிழ்நாட்டில் அரசு அனுமதிக்க வேண்டும்.
பாமாலினை தடை செய்ய வேண்டும். மருத்துவ குணம் கொண்ட தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் உள்ளிட்டவைகளை பொது வணிக அங்காடிகளில் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய இயக்குனர் தங்கர்பச்சான்,
எங்காவது தமிழ்நாட்டில் விவசாயம் செய்து கோடீஸ்வரன் ஆனவர்களை பார்த்து உள்ளீர்களா?? விவசாயிகள் வாழ்நாள் முழுவதும் காலநிலை மாற்றம் மற்றும் கடனுடன் போராடி வருகிறார்கள்.
ஏற்கனவே அரசு கொடுக்கும் சாராயத்தை குடித்து லட்சக்கணக்கான மக்கள் இறக்கிறார்கள். பாமாலினை எப்போது இறக்குமதி செய்கிறீர்கள்? ஏன் இறக்குமதி செய்கிறீர்கள்? வெளிநாட்டில் இருந்து வாங்குவதால் அதில் கிடைக்கும் கமிஷன் கிடைக்க வேண்டி பாமாலின் இறக்குமதி செய்கிறீர்கள்.
முதல்வர் வீட்டிலும், வேளாண் துறை அமைச்சர் வீட்டிலும் பாமாலின் மூலம் சமைக்கிறார்களா? பக்கத்து மாநிலமான கேரளாவை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்.
அங்கு விளைகிற தேங்காயை வைத்து என்னென்ன செய்கிறார்கள். தமிழ்நாட்டில் உற்பத்தி ஆகக்கூடிய நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் ஆகியவற்றுக்கு உரிய விலையை கொடுத்து வாங்கி, பாமாலினுக்கு மாறுதலாக விநியோகம் செய்யுங்கள்.. பதநீர், நீரா உள்ளிட்ட பானங்களை இறக்கி விற்பனை செய்ய கூடாது என சொல்லாமல் திமுக அரசு அதற்கு அனுமதி அளிக்க வேண்டும். விவசாய குடும்பங்களை அழவைப்பது என்ன பயன் என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய இயக்குனர் கவுதமன்,
ஆட்சி செய்யும் திமுக மற்றும் முன்னாள் ஆட்சியாளர்கள் அதிமுக ஆகியோர் சாராயம் விற்பதில் தான் குறிக்கோளாக இருக்கிறார்கள். கள் இறக்கி விற்பனை செய்தால் அவர்களுக்கு அந்த தொழிலில் பாதிப்பு ஏற்பட்டு விடும் என எண்ணுகிறார்கள்.
வங்கதேச கலவரம் போல ஒருநாள் விவசாயிகளுக்காக அனைத்து சமாதிகளையும் இந்த இளைய தலைமுறை அடித்து உடைக்கும் அப்போது தெரிய வரும் என பேசினார்.