தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பாடப்புத்தகத்திலிருந்து அரசியலமைப்பு சட்ட முகவுரை எக்காரணம் கொண்டும் நீக்கப்படாது என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கமளித்துள்ளார்.
என்சிஇஆர்டி புத்தகத்திலிருந்து முகவுரையை நீக்க சதி நடப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியிருந்தது. இதற்குப் பதிலளித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸின் குற்றச்சாட்டுக்கு எந்தவொரு அடிப்படையுமில்லை என்றும், தேசிய கல்விக் கொள்கையின்படி முதன்முறையாக அரசியலமைப்பு சட்டத்தின் பல்வேறு அம்சங்களான முகவுரை, அடிப்படை உரிமைகள், அடிப்படை கடமைகள், தேசிய கீதம் ஆகியவற்றுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடுபவர்கள், தவறான தகவலை பரப்புவதற்கு முன் உண்மையை புரிந்துகொள்ள வேண்டும் என்றும் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மெக்காலே கல்விக் கொள்கையால் ஈர்க்கப்பட்ட காங்கிரஸ், நாட்டின் வளர்ச்சியையும் கல்வித் துறை மேம்பாட்டையும் விரும்புவதில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.