வங்கதேச விவகாரத்தை தீவிரமாக கண்காணித்து வருவதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
வங்கதேச வன்முறை மற்றும் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தது தொடர்பாக மாநிலங்களவையில் உரையாற்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்,
பாதுகாப்பு படை தலைவர்களுடன் மேற்கொண்ட ஆலோசனையின் அடிப்படையில், வங்கதேச பிரதமர் பதவியை ராஜினாமா செய்வது என ஷேக் ஹசீனா வெளிப்படையாக முடிவு எடுத்தது தெரியவந்ததாக கூறினார்.
மேலும் இந்தியாவில் தன்னை அனுமதிக்குமாறு ஷேக் ஹசீனா குறுகிய நேரத்தில் விடுத்த வேண்டுகோளை தாங்கள் ஏற்றுக் கொண்டதாகவும், இதன் அடிப்படையில்தான் அவர் இந்தியாவை வந்தடைந்ததாகவும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
தொடர்ந்து வங்கதேசத்தின் கள நிலவரத்தை விவரித்த அவர், வங்கதேசத்தில் உள்ள இந்தியர்களுடன் தூதரகம் வாயிலாக தொடர்பில் இருப்பதாகவும், சுமார் 19 ஆயிரம் இந்தியர்கள் அந்நாட்டில் உள்ள நிலையில், அதில் 9 ஆயிரம் பேர் மாணவர்கள் என்றும் கூறினார்.
வங்க தேசத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போதிலும் டாக்காவில் போராட்டக்காரர்கள் கூடி பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் நுழைந்ததாக கூறிய அமைச்சர் ஜெய்சங்கர், பல்வேறு அமைப்புகள் மூலம் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியதாக தெரிவித்தார்.