வங்கதேச பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து ஷேக் ஹசீனா ராணுவ ஹெலிகாப்டரில் இந்தியா வந்தது தொடர்பாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் விளக்கமளித்துள்ளன.
வங்கதேச பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ததாக ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில், இந்தியா- வங்கதேச எல்லையில் ராணுவ ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்து வந்ததை ரேடார் மூலம் கண்டறிந்ததாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் ரேடார் மூலம் அந்த ஹெலிகாப்டரில் ஷேக் ஹசீனா இருந்ததை உறுதிப்படுத்திய ராணுவ அதிகாரிகள், அதனை இந்தியாவுக்குள் வர அனுமதித்ததாகவும், அவருக்கு பாதுகாப்பாக மேற்கு வங்க மாநிலம் ஹஷிமரா விமானப் படை தளத்திலிருந்து இரண்டு ரஃபேல் போர் விமானங்கள் பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களின் வான்பகுதியில் வட்டமிட்டதாகவும் அவர்கள் கூறினர்.
இவ்வாறு ஷேக் ஹசீனாவின் ஹெலிகாப்டர் உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத்தை வந்தடையும் வரை அவருக்கு வேண்டிய பாதுகாப்பு அளித்ததாக பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.