வயநாட்டில் கடைசி நபரை மீட்கும் வரை மீட்பு பணி தொடரும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட மைய பகுதியில் விரிவான அளவில் மீட்பு பணி நடத்தப்பட்டதாகவும், 224 பேரின் இறப்பு அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்படுவர் என்று கூறிய பினராயி விஜயன், பாதிக்கப்பட்ட பகுதியில் வீடுகளிலிருந்து மீட்கப்பட்ட நகைகள் உள்ளிட்ட முக்கிய பொருட்கள் அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று உறுதியளித்தார்.
பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு இழப்பீடு வழங்கும் வகையில் பொதுப்பணித் துறையினர் ஆய்வு மேற்கொள்வர் என்றும், வாழ்வதற்கு தகுதியற்ற குடியிருப்புகளை இடித்து தள்ளுவது தொடர்பாக நிபுணர்கள் முடிவு எடுப்பார்கள் என்றும் பினராயி விஜயன் கூறினார். கடந்த ஜூலை 30-ஆம் தேதி முதல் இதுவரை முதல்வரின் நிவாரண நிதிக்கு 53 கோடியே 98 லட்சம் ரூபாய் கிடைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.