சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ பணிகள் துரித கதியில் நடைபெற்று வரும் நிலையில், இந்தியாவிலேயே முதல்முறையாக இரண்டு அடுக்கு மெட்ரோ மேம்பாலம் விரைவில் அமைய உள்ளது. டபுள் டக்கர் மெட்ரோ எப்படி? எங்கு? அமைக்கப்படுகிறது என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்!
சென்னையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஏற்ப, பேருந்துகள், மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில்களின் தேவை அதிகரித்துள்ளது. குறிப்பாக போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரயில் தற்போது பேரூதவியாக இருந்து வருகிறது. முதற்கட்டமாக சென்னை விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை இரு தடங்கள் வழியாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன, இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தை அடுத்து, மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவுபடுத்தும் விதமாக சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டம் உருவாகி வருகிறது.
அதன்படி மூன்றாவது வழித்தடத்தில், மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலும், நான்காம் வழித்தடத்தில் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலும், 5ஆம் வழித்தடத்தில், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கிலோ மீட்டர் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை செல்லும் நான்காவது வழித்தடமும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை செல்லும் ஐந்தாவது வழித்தடமும் சென்னை ஆழ்வார்திருநகர், ஆலப்பாக்கம், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இணைகிறது. இது இந்தியாவில் வேறு எங்கும் இதுவரை சாத்தியப்படாத, சவாலான இரண்டடுக்கு மெட்ரோ பாலமாக அமைய உள்ளது..
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த இரண்டு அடுக்கு மெட்ரோ ரயில் மேம்பாலம் 4 கிலோ மீட்டர் நீளம் கொண்டவை. இந்த புள் டக்கர் மெட்ரோ பாலத்தில் ஆழ்வார்திருநகர், ஆலப்பாக்கம், வளசரவாக்கம், காரம்பாக்கம் ஆகிய நான்கு ரயில் நிலையங்கள் அமைய உள்ளன. தரை மட்டத்திலிருந்து 50 அடி உயரத்திற்கு நான்காம் வழித்தடமும் 70 அடி உயரத்தில் ஐந்தாம் வழித்தடமும் ஒன்றின் மேல் ஒன்றாக ஒரே தூணில் அமைகிறது. டபுள் டக்கர் மெட்ரோ பாலத்திற்கு மொத்தம் 608 கார்டர்கள் பயன்படுத்தப்பட உள்ளது. தற்போது 64 கார்டர்கள் அமைக்கப்பட்டுள்ளதால் மீதமுள்ள காடர்கள் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
மெட்ரோ பணிகளினால், சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள், போக்குவரத்து இடையூறுகள் தற்போது ஏற்பட்டாலும், வரும் காலங்களில் பொதுமக்கள் எளிதாகவும், விரைவாகவும் பயணிக்க மெட்ரோ ரயில்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதுதான் நிதர்சனமான உண்மை.