வக்ஃபு வாரிய மசோதா மீது மக்களவையில் காரசார விவாதம் நடைபெற்றதை தொடர்ந்து, அம்மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்ப நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு சம்மதம் தெரிவித்தார்.
வக்ஃபு வாரியங்களில் இஸ்லாமிய பெண்களும், இஸ்லாமியர் அல்லாதோரும் இடம்பெறுவதை உறுதிசெய்யும் சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிமுகப்படுத்தினார்.
இந்த விவாதத்தின் மீது பேசிய காங்கிரஸ் எம்.பி. கே.சி.வேணுகோபால், இந்துக்களாகிய தாங்கள், பிற மதத்தை மதிப்பதாகவும், மத சுதந்திரத்தின் மீது வக்ஃபு வாரிய மசோதா நேரடி தாக்குதல் நடத்துவதாவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி, சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களை நிர்வகிக்க அதிகாரமளிக்கும் அரசியலமைப்பு சட்டப் பிரிவு 30 மீதான நேரடி தாக்குதல்தான் இந்த சட்டமசோதா என்று குற்றம்சாட்டினார்.
எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுக்கு ஆவேசமாக பதிலளித்த மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங், வக்ஃபு வாரியத்தில் வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்தவே இந்த மசோதா கொண்டுவரப்படுவதாகவும், இதை கோயிலுடன் ஒப்பிட்டு எதிர்க்கட்சியினர் திசைதிருப்புவதாகவும் குறிப்பிட்டார்.
விவாதத்தின் மீது பேசிய சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், இதே நிலை நீடித்தால் மக்களவைத் தலைவரின் உரிமை கூட நாளைக்கு பறிபோகலாம் என்றும், அவருக்கும் சேர்த்து எதிர்க்கட்சியினர் குரல் கொடுப்பதாகவும் கூறினார். அகிலேஷ் யாதவுக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் அமித் ஷா, சமரசத்தைப் பற்றி பேசும் அகிலேஷ் யாதவால், மக்களவைத் தலைவருக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் கிரண் ரிஜிஜு, சச்சார் கமிட்டி பரிந்துரையின்பேரில் தான் வக்ஃபு வாரிய மசோதா கொண்டு வரப்பட்டதாகவும், இதற்கு தனிப்பட்ட முறையில் இஸ்லாமிய எம்.பி.க்களே ஆதரவு அளிப்பதாகவும் கூறினார். பின்னர், எதிர்க்கட்சியினரின் கோரிக்கைப்படி, மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழு பரீசிலனைக்கு அனுப்பிவைக்க அவர் சம்மதம் தெரிவித்தார்.
முன்னதாக தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் சிவசேனா ஷிண்டே பிரிவு எம்.பி.க்கள் வக்ஃபு வாரிய சட்டத்திருத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசினர்.