டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், அம்மாநில முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு புகாரில் சிக்கி துணை முதல்வர் பதவியை மணீஷ் சிசோடியா இழந்தார்.
இந்த ஊழல் விவகாரத்தில் அவரை சிபிஐயும், அமலாக்கத் துறையும் கைது செய்து திகார் சிறையில் அடைத்தன. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் சிசோடியா தாக்கல் செய்த மனு மீது நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் தீர்ப்பளித்தனர்.
அந்த வகையில், சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதிகள், அவர் வெளிநாடு செல்வதை தவிர்க்கும் நோக்கில் கடவுச்சீட்டை ஒப்படைக்குமாறு உத்தரவிட்டனர்.
மேலும், ஜாமீன் காலத்தில் சாட்சியங்களை கலைக்கும் செயலில் சிசோடியா ஈடுபடக் கூடாது என நீதிபதிகள் நிபந்தனை விதித்தனர். இந்த வழக்கில் ஏறத்தாழ 17 மாதங்கள் கழித்து சிசோடியாவுக்கு ஜாமீன் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.