மாநிலங்களவையில் அவைத் தலைவர் ஜகதீப் தன்கர் மற்றும் சமாஜ்வாடி கட்சி எம்.பி. ஜெயா பச்சன் இடையே கடும் வாதம் நடைபெற்றது.
மாநிலங்களவைக் கூடியதும் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குறித்து பாஜக எம்.பி. கணேஷ்யாம் திவாரி ஆட்சேபத்துக்குரிய கருத்தை தெரிவித்தார்.
இதனை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டுமென சமாஜ்வாடி கட்சி எம்.பி. ஜெயா பச்சன் மற்றும் எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கினர்.
அப்போது, அவைத் தலைவர் ஜகதீப் தன்கர், கடுமையான தொனியில் பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு ஆட்சேபம் தெரிவித்த ஜெயா பச்சன், அவைத் தலைவர் ஜகதீப் தன்கர், நல்லொழுக்கம் பற்றி தனக்கு பாடம் புகட்ட வேண்டாமென கடிந்துகொண்டார்.
இந்த விவகாரத்தில் அவைத் தலைவரை கண்டித்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். அப்போது வெள்ளையனே வெளியேறு போராட்டத்தைப் போல எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேறுவதாக ஜகதீப் தன்கர் கிண்டல் செய்தார்.
இதைத்தொடர்ந்து, அவையில் எதிர்க்கட்சியினர் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக கூறி, பாஜக குழுத் தலைவர் ஜெ.பி.நட்டா கண்டனத் தீர்மானம் கொண்டுவந்தார்.