ஆடி வெள்ளி மற்றும் ஆரப்பூரத் திருவிழாயையொட்டி தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் தேரோட்டம் நடைபெற்றது.
திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோயிலில் ஆடிப்பூர தெப்ப திருவிழா கடந்த 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடிப்பூர தெப்ப உற்சவம் கோயில் வளாகத்தில் உள்ள சூரியதீர்த்த தெப்பகுளத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளினர்.
பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயிலில் ஆடி வெள்ளியையொட்டி தங்க தேரோட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
ஆடி வெள்ளியையொட்டி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தங்க தேர் பவனி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பக்தர்கள் தங்க தேரை பிடித்து இழுத்து வழிபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம், கழுக்கானிமுட்டம் மஹா பஞ்சமி வாராகி அம்மன் கோயிலில், கருட பஞ்சமி திதியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்று குத்து விளக்கு ஏற்றி பூஜை செய்து வழிபட்டனர்.