கன்னியாகுமரியில் செயல்படும் செங்கல் சூளைகள் சட்டவிரோதமாக மண் அள்ளுவதாக கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை பகுதியில் உள்ள தாமிரபரணி ஆறு உட்பட நீர்நிலை கரையோரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட செங்கல் சூளை செயல்பட்டு வருகின்றன. தாமிரபரணி ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளின் கரையோரங்களில் உள்ள விவசாய நிலங்களை ஆழப்படுத்தி செங்கல் சூளை உரிமையாளர்கள் சட்டவிரோதமாக மண் அள்ளுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்நிலையில், தாமிரபரணி ஆற்றங்கரையில் இயங்கி வரும் பால்ராஜ் என்பவரின் செங்கல் சூளையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீர்நிலைகளில் சட்டவிரோதமாக மண் அள்ளுவதால் மழை காலங்களில் குடியிருப்பை தண்ணீர் சூழ்ந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டிய அவர்கள், விவசாய நிலங்களை அழித்து சுற்று சூழல் பாதிப்பை ஏற்படுத்தி வரும் மண் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.