ஒலிம்பிக்கில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பிரேக் டான்ஸின் முதல் போட்டியில் இந்தியா வெற்றிபெற்றுள்ளது. ஆனால் வென்றவர் இந்தியர் அல்ல. கேட்பதற்கு சற்று குழப்பமாக இருந்தாலும் இதற்குள் ஒரு சுவாரஸ்யம் ஒளிந்திருக்கிறது.
இதுவரை நடனமாகவே பார்க்கப்பட்டு வந்த பிரேக் டான்ஸ் ஒரு விளையாட்டாக ஒலிம்பிக்கில் இணைக்கப்பட்டது பலருக்கும் வியப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
1970-களில் அமெரிக்காவில் உருவானதே இந்த பிரேக் டான்ஸ். நடனம் மட்டுமல்லாமல்
POWERFUL-ஆன உடல் அசைவுகள், மலைக்க வைக்கும் வகையில் உடலை பல்வேறு கோணங்களில் சுழற்றும் SPIN அசைவுகள், வேகமான MOVEMENTS-க்கு இடையே உறைந்தபடி நிற்கும் FREEZE நிலை ஆகியவற்றை உள்ளடக்கியது. கலை மற்றும் உடற்பயிற்சி சார்ந்த காரணிகளை உள்ளடக்கிய பிரேக் டான்ஸ் ஒலிம்பிக்கில் முதன்முறையாக சேர்க்கப்பட்டது.
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த முதல் போட்டியில் வென்றுள்ளார் INDIA SARDJOE என்ற இளம்பெண். பெயரில் இந்தியாவைக் கொண்டிருந்தாலும் அவர் இந்தியர் அல்ல, நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்.
18 வயது இளம்பெண்ணான B-GIRL இந்தியா சர்ட்ஜோ, ஒலிம்பிக்கின் முதல் பிரேக் டான்ஸ் போட்டியில் வென்றதன் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.
தொடக்கத்தில் கால்பந்து விளையாடிய சர்ட்ஜோ, பின்னர் பிரேக் டான்ஸ் பக்கம் தமது கவனத்தை திருப்பினார். 10 வயதிலயே தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்ற அவர், 2022-ஆம் ஆண்டு உலகச் சாம்பியன் பட்டத்தையும் வென்றிருக்கிறார்.
பொதுவாக B-GIRL மற்றும் B-BOY-கள் புனைப்பெயரில்தான் பிரேக் டான்ஸ் போட்டிகளில் பங்கேற்பார்கள். ஆனால் இந்தியா சர்ட்ஜோ தமது சொந்தப் பெயரிலேயே போட்டியில் கலந்துகொண்டார். 15 நாடுகள் மற்றும் அகதிகள் அணியைச் சேர்ந்தவர்கள் என மொத்த 33 பேர் பிரேக் டான்ஸ் போட்டியில் பங்கேற்றனர்.
அவர்களில் அகதிகள் அணியைச் சேர்ந்த மணிஷா தலாஷ் ஆப்கன் பெண்களுக்கு விடுதலை வேண்டும் என்ற வாசகத்துடன் கூடிய உடையை அணிந்து போட்டியில் பங்கேற்றதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த மணிஷா அங்கிருந்து வெளியேறி ஸ்பெயின் நாட்டில் தஞ்சமடைந்துள்ளார். தலிபான் ஆட்சியில் ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு சுதந்திரம் இல்லை என்பதை உலகுக்கு உணர்த்துவதற்காகவே அதுபற்றிய வாசகங்களுடன் அவர் ஒலிம்பிக்கில் பங்கேற்றதாக தெரிகிறது. எனினும் அது விதிகளுக்கு எதிரானது என்பதால் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
இதற்கிடையே ஒலிம்பிக் பிரேக் டான்ஸின் முதல் போட்டியில் வென்ற இந்தியா சர்ட்ஜோவால் எந்த பதக்கத்தையும் வெல்ல முடியவில்லை. வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் சீன வீராங்கனையிடம் அவர் தோல்வி அடைந்தார். இருப்பினும் எதிர்காலத்தில் உலக பிரேக் டான்ஸ் அரங்கை அவர் அதிர வைப்பார் என்பதே பலரது நம்பிக்கை.