நாளைய தினம் தமிழகம் முழுவதும் பாஜக சார்பாக, தேசியக் கொடி ஏந்தி வாகனப் பேரணி நடைபெறும் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
நமது நாட்டின் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழக பாஜக
சார்பாக நமது தேசியக் கொடியுடன் வாகனப் பேரணி செல்ல, திமுக அரசு அனுமதி மறுத்திருந்தது.
திமுக அரசின் இந்த அராஜக நடவடிக்கையை எதிர்த்து, நமது மாநிலத் துணைத் தலைவர், வழக்கறிஞர் அண்ணன் ஆர்.சி. பால்கனகராஜ் அளித்த மனுவின் மீது தீர்ப்பளித்துள்ள மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம், தேசியக் கொடியுடன் ஊர்வலம் செல்லத் தடை விதிப்பது, அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என, திமுக அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும், வாகனப் பேரணிக்கு அனுமதியும் வழங்கியுள்ளது. மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை, தமிழக பாஜக சார்பாக மனமார வரவேற்கிறோம். மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற அறிவுரையின்படி, தமிழகம் முழுவதும், நாளைய தினம், தமிழக பாஜக சார்பாக, தேசியக் கொடி ஏந்தி வாகனப் பேரணி நடைபெறும். பாஜக சகோதர சகோதரிகளும், பொதுமக்களும் பெருமளவில் கலந்து கொள்ளுமாறு அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார்.