தேசத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இன்றும் கூட, ‘அனைவரையும் உள்ளடக்கிய பாரதம்’ என்ற எண்ணத்தின் மீது தாக்குதல் நடந்து வருகிறது எனத் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
14 ஆகஸ்ட், 1947ஆம் ஆண்டில் நடந்த கொடுமைகளை, பிரிவினைக் கொடுமைகள் நினைவு தினமாக அனுசரிக்கும் இந்நாளில், முஸ்லிம்களுக்கு என ஒரு சொந்த நாடு தேவை என அகில இந்திய முஸ்லிம் லீக் கடுமையாக நிர்பந்தித்ததன் விளைவால் பாரதம் பிளவுபடுத்தப்பட்டபோது ஏற்பட்ட வன்முறையில் தங்கள் வசிப்பிடங்களில் இருந்து வேரறுத்து அகதிகளாக்கப்பட்ட ஒன்றரை கோடிக்கும் அதிகமான அப்பாவி இந்தியர்களையும், கொல்லப்பட்ட ஐந்து லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்களையும், பல லட்சம் இந்திய சிறுமிகள் மற்றும் பெண்களை கடத்தியும் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியும் வேறு மதத்துக்கு மாற்றியும் நடந்த கொடுமைகளை நினைவுகூர்வோம்.
பிற மதங்களுக்கு எதிரான இந்த வன்முறை சகிப்புத்தன்மையற்ற நச்சு சித்தாந்தம், பல்லாயிரம் ஆண்டுகளாக உலகளாவிய சகோதரத்துவம் மற்றும் அனைத்து மதங்களுக்கும் சமமான மரியாதை என்ற தத்துவத்தின் அடிப்படையில் நிறுவப்பட்ட நாகரிக நாடாக விளங்கும் பாரதத்தின் சிந்தனைக்கு முரணானது.
இனம், மதம், பிரதேசம், ஜாதி ஆகியவற்றின் அடிப்படையில் குழப்பங்களையும் சமூக பதற்றங்களையும் உருவாக்க முயலும் சில பாரத எதிர்ப்பு சக்திகளால் தேசத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இன்றும் கூட, ‘அனைவரையும் உள்ளடக்கிய பாரதம்’ என்ற எண்ணத்தின் மீது தாக்குதல் நடந்து வருகிறது. இத்தகைய சக்திகளுக்கு எதிராக நாம் எப்போதும் விழிப்புடன் இருந்து, பாரதத்தின் ஆன்மாவாகிய முழுமையான சமூக நல்லிணக்கத்தைப் பேணி வாழ வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.