கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலையை கண்டித்து நாடு முழுவதும் 24 மணி நேர மருத்துவ சேவை ரத்து செய்ய உள்ளதாக இந்திய மருத்துவ கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிவந்த பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
இந்த விவகாரத்தில் சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்த நிலையில், வழக்கின் விசாரணை சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பெண் மருத்துவர் கொலையை கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாடு தழுவிய மருத்துவ சேவைகளை வாபஸ் பெறுவதற்கான அறிவிப்பை இந்திய மருத்துவ கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.
இதன்படி, ஆகஸ்டு 17ம் தேதி காலை 6 மணி தொடங்கி, ஆகஸ்டு 18ம் தேதி காலை 6 மணி வரை சேவைகள் வாபஸ் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிநோயாளிகள் பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை நடைபெறாது என்றும், பிற அத்தியாவசிய சேவைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.