கள்ளக்குறிச்சி அருகே விவசாய நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காததால் வீடியோ வெளியீட்டு விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கரடிசித்தூர் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவருக்கு சொந்தமாக ஏரி பகுதியில் விவசாய நிலம் உள்ளது. இவரது ஏரி பாசன வாய்க்கால்களை சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
விவசாய நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரியும், விவசாய நிலத்திற்கு வழித்தடம் கேட்டு கடந்த 3 ஆண்டுகளாக அவர் அதிகாரிகளிடம் மனு அளித்து வந்ததாக கூறப்படுகிறது.
கிராம நிர்வாக அலுவலர் முதல் முதலமைச்சரின் தனிப்பிரிவு வரை சக்திவேல் புகார் மனு அளித்ததாகவும், ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சக்திவேலை அலைக்கழித்ததாகவும் தெரிகிறது. இதனால், மனமுடைந்த விவசாயி சக்திவேல், தனது விவசாய நிலத்தில் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தார்.
இறப்பதற்கு முன்பு . சக்திவேல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில், ஏழைகளுக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். பணக்காரர்களுக்கு மட்டுமே உதவும் இந்த அதிகாரிகள் ஏழைகளுக்கு உதவ முன் வர மாட்டார்களா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.