பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரத்தை கண்டித்து இன்று நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த பயிற்சி பெண் மருத்துவர் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது
கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கிடைக்க வலியுறுத்தியும், பணியில் இருக்கும் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரியும் நாடு முழுவதும் மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பாலியல் கொலை தொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்த நிலையில் வழக்கின் விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது
இதற்கிடையே, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மருத்துவமனை முன்பு நடந்த போராட்டம் கலவரமாக மாறியதையடுத்து மருத்துவமனையை போராட்டக்காரர்கள் சூறையாடினர்.
இந்நிலையில் பெண் மருத்துவரின் வழக்கை தீவிரமாக எடுத்துள்ள இந்திய மருத்துவ சங்கம் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் அறிவித்ததையடுத்து, மருத்துவர்கள் இன்று காலை 6 மணி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
24 மணி நேரம் நடைபெறும் வேலைநிறுத்த போராட்டத்தில் புறநோயாளிகள் பிரிவு செயல்படாது எனவும், அவசர சிகிச்சை பிரிவு மற்றும் அத்தியாவசிய சேவைகள் வழக்கம் போல இயங்கும் எனவும் மருத்துவ சங்கம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.