திருவாரூர் மாவட்டம், ஆதனூரில் காவலரை வெட்டிவிட்டு தப்பியோட முயன்றவரை போலீசார் சுட்டுப் பிடித்தனர்.
திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி மனோ நிர்மல் என்பவரை தனிப்படை அமைத்து போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் அவர் ஆதனூரில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் மனோ நிர்மலை கைது செய்ய முயன்றுள்ளனர். அப்போது காவலர் விக்னேஷ் என்பவரை வெட்டிவிட்டு மனோ நிர்மல் அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளார்.
இதனையடுத்து போலீசார் மனோ நிர்மலை காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். பின்னர் காயமடைந்த காவலர் விக்னேஷ் மற்றும் ரவுடி மனோ நிர்மல் ஆகியோர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.